மதுரவாயல் பறக்கும் சாலை 2 அடுக்கு மேம்பாலமாக அமைகிறது சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

சென்னை: மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை முதல் பெங்களூரு இடையே பசுமை வழிச்சாலை திட்டம் 10 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.15 ஆயிரம் கோடி ஆகும். பொருளாதார ரீதியாக இந்த திட்டம் தமிழகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது நேரடி கட்டுப்பாட்டு சாலை. இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் பெங்களூரு-சென்னை இடையேயான பயண நேரம் 3 மணி நேரத்துக்கும் குறைவாக இருக்கும். இது சர்வதேச தரத்தில் அமைக்க இருக்கிறோம்.

சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான இந்த 250 கி.மீ. தூரம் செல்ல அதிகபட்சமாக 2.30 மணி நேரம் மட்டுமே பயண நேரமாக எடுத்துக்கொள்ளும். சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை முக்கியமான திட்டமாகும். நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி உள்பட இந்த 6 வழித்தட திட்டம் ரூ.7 ஆயிரத்து 500 கோடியில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளது. சுற்றுச்சூழல் துறை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பின்னர் பணிகளை தொடங்குவோம். இந்த திட்டத்துக்கும், பிற திட்டத்துக்கும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகவும், சுற்றுச்சூழல் துறையிடம் ஒப்புதல் பெறும் விவகாரத்திலும் மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை.

சித்தூர்-தச்சூர் சாலை திட்டம் புதிதாக அறிவிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை. இந்த திட்டம் சென்னை சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க செயல்படுத்தப்படுகிறது. தொழில்துறையில் வளர்ந்த பகுதிகள் வழியாக ரூ.4 ஆயிரம் கோடியில்  116 கி.மீ. தூரம் அமைகிறது. சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தின் வடிவமைப்பு என்னிடம் காண்பிக்கப்பட்டது. இதனை நான் நிராகரித்துவிட்டேன். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் நல்ல ஆலோசகர்களை சந்தித்து, 2 அடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான வடிவமைப்பை சமர்ப்பிக்குமாறு ஆலோசகர்களிடம் தெரிவித்திருக்கிறோம். அதன் பின்னர் ஒப்புதல் அளிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுவை கட்டுப்படுத்த முழுமையான தீர்வினை கொண்டுவர விரும்புகிறோம்.

சுற்றுச்சூழல் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை இடையே 6 வழித்தடம் முக்கியமானது. தமிழகத்தில் உள்ள தொழிலாளர் துறை, ஆட்டோமொபைல் துறையுடன் இணைந்து செயல்படுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவை முதல் இடத்துக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஸ்கிராப்பிங் மற்றும் தோல் துறையும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும். பாஸ்டேக் திட்டத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

Related Stories: