மேடையில் பேசியபடி மயங்கி விழுந்ததால் பரபரப்பு: குஜராத் முதல்வருக்கு கொரோனா

அகமதாபாத்: பிரசார கூட்டத்தில் பேசி கொண்டிருக்கும் போது மேடையில் மயங்கி விழுந்த, குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி நேற்று முன்தினம் வதோத்ரா மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மேடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அகமதாபாத் கொண்டு செல்லப்பட்ட அவர், யுஎன். மேதா இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், முதல்வருக்கு லேசான தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது. துணை முதல்வர் நிதின் படேல் கூறுகையில், முதல்வருக்கு கொரோனா தொற்று இருப்பதால், யாரும் அவரை சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை. விதிமுறைகளின்படி, அவருக்கு சிகிச்சை அளிப்படுகிறது. அவருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இதர நோய் பாதிப்புகள் எதுவுமில்லை,’’ என்றார்.

Related Stories: