பலி எண்ணிக்கை 54 ஆனது உத்தரகாண்ட் சுரங்கத்தில் மேலும் 3 சடலங்கள் மீட்பு: குடும்பத்தினர் நம்பிக்கை இழந்தனர்

டேராடூன்: உத்தரகாண்டில் தபோவான் சுரங்கத்தில் இருந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 54 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக சுரங்கத்தில் இருந்து சடலங்கள் மீட்கப்படுவதால் அங்கு சிக்கியிருப்பவர்களின் குடும்பத்தினர் நம்பிக்கை இழந்துள்ளனர். உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்ததால் கடந்த 7ம் தேதி கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் தபோவான் மற்றும் ரிஷி கங்கா நீர்மின் நிலையத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அடித்து செல்லப்பட்டனர். இவர்களை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தபோவான் அருகே சுரங்கத்தில் பணியாற்றிய 30 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினார்கள். அவர்களை மீட்பதற்காக தொடர்ந்து மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 3 சடலங்களை மீட்பு குழுவினர் கண்டறிந்தனர். இதுவரை 9 சடலங்கள் தபோவான் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 115 பேரை காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த 54 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. தபோவான் சுரங்கம் உட்பட தொடர்ந்து பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. சுரங்கத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிரோடு மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை இழந்து வருவதாக அங்கு திரண்டுள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: