துணைமுதல்வரின் சொந்த ஊரில் பெரியகுளம் ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக: அதிமுக தோற்கடிப்பு

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு 2019ல் நடந்த தேர்தலில் திமுக - 8, அதிமுக - 6, அமமுக, தேமுதிக தலா ஒரு இடத்தை கைப்பற்றின. ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக  கைப்பற்றும் என்ற நிலையில், 8வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வம், அதிமுகவுக்கு தாவினார். இதனால், திமுகவின் பலம் 7 ஆக குறைந்தது. கடந்தாண்டு ஜனவரியில் தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் வராததால் மூன்று முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தலைவர், துணைத்தலைவர் பதவிகள் காலியாக இருந்தன. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில், பெரியகுளம் ஒன்றிய தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல், பெரியகுளம் யூனியன் அலுவலகத்தில், சார் ஆட்சியர் சினேகா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் 7 பேர், திமுக சார்பில் 7 பேர் மற்றும் அமமுக, தேமுதிக கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதில், தேமுதிக கவுன்சிலர் பாக்கியம், அமமுக கவுன்சிலர் மருதையம்மாள் ஆகியோர் ஆதரவுடன் திமுக கவுன்சிலர் தங்கவேல் (9 / 16) பெரியகுளம் (தனி) யூனியன் தலைவர் பதவியை கைப்பற்றினார். அவருக்கு, பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில், யூனியன் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்பதற்கு இது முன்னோட்டம்’’ என்றார். திமுக, தேமுதிக ஆதரவுடன் துணைத்தலைவராக அமமுக கவுன்சிலர் மருதையம்மாள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

Related Stories: