முதல் மனைவியுடன் 3 நாள், கள்ளக்காதலியுடன் 3 நாள்: வாரத்தில் ஒரு நாள் ஜாலியாக சுற்றி திரிந்தவர் மீது வழக்கு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அடுத்த கோக்கர் திரில் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மகாடோ என்பவர் மீது அவரது மனைவி சதர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் குடும்பம்  நடத்துவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதையடுத்து, ராஜேஷ் மகாடோ, அவரது முதல் மனைவி, அவரது கள்ளக்காதலி ஆகியோர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். போலீசார் விசாரணை  நடத்தியதில், ராஜேஷ் மகாடோ அவரது கள்ளக் காதலியை 2வது மனைவியாக திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

அதையடுத்து, போலீசார் வழக்கு ஏதும் பதியாமல் ஓர் ஒப்பந்தம் செய்து வைத்தனர். அதன்படி, வாரத்தில் முதல் 3 நாட்கள் முதல் மனைவியுடனும், அடுத்த 3 நாட்கள் கள்ளக்காதலியுடனும் (இரண்டாவது மனைவி), மீதமுள்ள ஒரு நாள்  ராஜேஷ் மகாடோ தன் விருப்பத்தின்படி நடந்து கொள்ளலாம் என்று கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர். போலீசார் செய்துவைத்த பஞ்சாயத்தின் அடிப்படையில், வாரத்தில் முதல் 3 நாள் முதல் மனைவியுடனும், அடுத்த 3 நாட்கள் கள்ளக்  காதலியுடனும், மீதமுள்ள ஒரு நாளை தன் விருப்பப்படி ராஜேஷ் சுற்றித் திரிந்தும் வந்தார்.

ஆனால், போலீசார் முடித்துவைத்த பஞ்சாயத்து ஒரு சில வாரங்களே நீடித்தது. பின்னர், இரு பெண்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. மீண்டும் காவல் நிலையத்தில் முதல் மனைவி புகார் அளித்தார். அதையடுத்து, ராஜேஷ் மகாடோ  மற்றும் அவரது கள்ளக்காதலி மீது வழக்குபதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ராஜேஷ் மகாடோவின் முதல் மனைவிக்கு  ஒரு குழந்தை உள்ளது.

இருந்தும் அவர் 2வதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறினார். அதனால், அவர்களை சமரசம் செய்து வைத்து அனுப்பி வைத்தோம். ஆனால், அது பலனளிக்கவில்லை. அதனால், ராஜேஷ் மகாடோ மற்றும் அவரது  கள்ளக்காதலி ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர்களுக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது’ என்றனர்.

Related Stories: