காரைக்காலில் கொரோனாவால் மூடப்பட்ட வாரச்சந்தை மீண்டும் திறப்பு-வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

காரைக்கால் : காரைக்காலில் ெகாரோனா பெருந்தொற்றால் மூடப்பட்ட வாரச்சந்தை மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.காரைக்காலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருநள்ளாறு ரோட்டில் உள்ள நகராட்சி திடலில் வாரச்சந்தை நடத்தப்படுவது வழக்கம். இதன் மூலம் உள்ளூர் வியாபாரிகளும், வெளியூர் வியாபாரிகளும் பயனடைந்து வந்ததோடு பொதுமக்களும் குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறிகளை வாங்கி பயனடைந்தனர்.

ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வாரச் சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 11 மாதங்களாக வாரச்சந்தை நடைபெறவில்லை. பின்னாளில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்க பட்டபோதும் வாரச் சந்தை மட்டும் நடத்தப்படவில்லை. இதையடுத்து பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தையை நடத்திக்கொள்ள அரசு னுமதி அளித்துள்ளது.

இதையடுத்து 11 மாதங்களாக நடத்தப்படாமல் இருந்த வாரச்சந்தை நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது. அதையடுத்து நேற்றுமுதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடைபெற இருக்கிறது. இந்த வாரச்சந்தையில்உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாச்சலம், புதுச்சேரி, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் வியாபாரிகள் காய்கறிகளை எடுத்து வந்து சந்தையில் விற்பனைக்காக வைத்திருந்தனர். முதல் நாள் என்பதால் மக்களுக்கு தெரியாததால் போதிய அளவு விற்பனை நடை பெறவில்லை.

சுமார் ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் மீண்டும் பழைய இடத்தில் வாரச்சந்தை தொடங்கி இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள உள்ளூர் மக்கள், ஒரே இடத்தில் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், வாரந்தோறும் தவறாமல் இந்த சந்தையை நடத்துவதோடு சந்தையில் வியாபாரிகளுக்கு சிரமமின்றி காய்கறிகளை வியாபாரம் செய்வதற்கு தகுந்தார்போல அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கும்பகோணம் வியாபாரி புருஷோத்தமன் கூறும்போது, தனது கஸ்டமர்கள் வரத்தொடங்கியிருப்பதாகவும் கஸ்டமர்கள் அதிகரிக்கும்போது அவர்களுக்கு மேலும் விலையை குறைத்து காய்கறிகள் கொடுப்பேன் என்றும் கூறினார்.

Related Stories: