புல்வாமா தீவிரவாத தாக்குதலை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது: சிஆர்பிஎப் ஆவேசம்

புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது வெடிபொருட்களுடன் வந்த வாகனத்தை தீவிரவாதிகள் மோதி வெடிக்கச் செய்தனர். இதில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியது தெரிந்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இந்த சம்பவத்தின் 2ம் ஆண்டு நினைவு தினம், நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மன்னிக்கவும், மறக்கவும் முடியாத தாக்குதல். நாட்டுக்காக உயிரிழந்த சகோதரர்களுக்கு வணக்கம்’ என்று தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி இரங்கல்: சென்னையில் நடந்த விழாவில் மோடி தனது உரையில், ‘‘இந்த நாளை எந்த இந்தியரும் மறக்கவில்லை. புல்வாமா தியாகிகளுக்கு மரியாதை செலுத்துகிறோம். நம வருங்காலத் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் விதமாக தீரத்துடன் செயல்பட்ட வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறோம்’’ என்று கூறினார்.

* தாக்குதல் முறியடிப்பு

புல்வாமா தாக்குதல் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், ஜம்முவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிலையம் அருகே சக்தி வாய்ந்த 7 கிலோ வெடிபொருள் (ஐஇடி) இருப்பது கண்டறியப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர். இதன்மூலம், புல்வாமா நினைவு தினத்தில் தீவிரவாதிகள் நடத்த இருந்த மிகப்பெரிய தாக்குதலை பாதுகாப்பு படைகள் முறியடித்துள்ளன.

Related Stories: