அரசியலில் ஒதுங்கியிருந்தவருக்கு ‘காதலர் தின பரிசு’ பீகார் அமைச்சர் ஷாநவாசின் காதல் ‘டூ’ தொழில் துறை: வாஜ்பாய் அறிவுரையால் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள்

பாட்னா: அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பீகார் அமைச்சர் ஷாநவாசின் காதல் டூ தொழில்துறை குறித்து தற்போது ஊடகங்களில் சுவாரஸ்யமாக பேசப்படுகிறது. அதுவும் காதலர் தினத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளதாகவும்,  வாஜ்பாய் அறிவுரையால் அவரது வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்பட்டதாகவும் அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.  பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று  வருகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், பாஜகவை சேர்ந்த எம்எல்சியான ஷாநவாஸ் உசைன் மாநில தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் பல துறைகளில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். இப்போது பீகார் மாநில அமைச்சராக பதவியேற்றதின் பின்னணி, அவரது கடந்தகால வாழ்க்கை குறித்து ஊடகங்களில் விரிவாக  பேசப்பட்டு வருகின்றன. கடந்த 1968 டிசம்பர் 12 அன்று பீகார்  மாநிலத்தின் சுபால் மாவட்டத்தில் ஷாநவாஸ் உசைன் பிறந்தார். அவர் தனது அரசியல் வாழ்க்கையை  1999ம் ஆண்டில் நடந்த 13வது மக்களவைத் தேர்தலின் போது தொடங்கினார்.  பல துறைகளில் மத்திய அமைச்சராக இருந்த அவர், 2004 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர், 2006ல் பாகல்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து  எம்பியாக தேர்வானார்.

2014 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் கூட அவருக்கு சீட் வழங்கவில்லை. ஆனால், தொடர்ந்து பாஜக செய்தித் தொடர்பாளராக  பணியாற்றினார்.  இப்போது பீகாரின் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். மாநில அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள ஷாநவாசின் மாணவர் பருவ காதல் கதை, பாலிவுட் நடிகர்களிடம் தொடர்பு, அரசியல் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக பேசப்பட்டு வருகிறது.  மேலும் நாளை மறுநாள் (பிப். 14) காதலர் தினம் என்பதால் தற்போது அவருக்கு மாநில அமைச்சர் பதவி கிடைத்திருப்பது ‘காதலர் தின பரிசு’ என்ற அவரது நண்பர்கள் மகிழ்ச்சியுடன் பேசிவருகின்றனர். அப்போதைய பிரதமர் வாஜ்பாயின்  அறிவுரையை கேட்காமல் இருந்திருந்தால், பாலிவுட்டுக்கு தாவியிருப்பார் என்றும் அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

சரி... அவரது காதல் வாழ்க்கையை பார்ப்போம். கடந்த 1986ம் ஆண்டில் சுபாலில் உள்ள வில்லியம்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்வி படிப்புக்காக டெல்லியில் உள்ள பூசா வேளாண் கல்லூரியில் ஷாநவாஸ்  சேர்ந்தார். அங்கு படிக்கும் போது, ​​டெல்லி ரோட்வேஸ் (டி.டி.சி) பேருந்தில் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். இந்த பேருந்தில், அவர் ஒரு அழகான இளம்பெண்ணைக் கண்டார். அந்த இளம்பெண்ணை கண்டதும் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த  பெண்ணை ஷாநவாஸ் பின்தொடர்ந்தார். கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில், முன்கூட்டியே ஏறி அமர்ந்து அந்த பெண்ணுக்கு ‘சீட்’ போட்டு வைத்தார். ஒருகட்டத்தில் அந்த ெபண்ணுடன் பேச வாய்ப்பு கிடைத்தது.

அந்த பெண்ணின் பெயர் ரேணு என்று தெரிந்தவுடன் ஷாநவாசுக்கு கவலை ஏற்பட்டது. காரணம், அந்த பெண் தனது மதத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால் வருத்தப்பட்டார். இருந்தும் ஷாநவாஸ் தனது முயற்சியை கைவிடவில்லை. ரேணுவின்  வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். ஒருகட்டத்தில் ரேணுவின் குடும்ப உறுப்பினர்களும் ஷாநவாசை விரும்பத் தொடங்கினர். ஆனால் ஷாநவாஸ், ரேணுவை காதலிப்பதை தெரிவிக்கவில்லை. சில மாதங்களுக்கு பின் தன் காதலை ரேணுவிடம்  தெரிவித்தார். ஆனால் அவர், ஷாநவாஸ் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது காதலை நிராகரித்தார். நட்பை மட்டும் தொடர அறிவுறுத்தினார்.

இருந்தும் ஷாநவாசின் ஒருதலைக் காதல் தொடர்ந்தது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக ரேணுவையும், அவரது குடும்பத்தினரிடமும் தனது காதல் விஷயத்தை எடுத்து கூறினார். இறுதியாக அவரது முயற்சிகள் பலனளித்தன. இருவரும்  இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் 1994ல் திருமணம் செய்து கொண்டனர். இன்றும் இந்த தம்பதியினரின் குடும்பத்தில், இரு மதங்களின் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இந்த தம்பதிக்கு ஆதிப் உசேன் மற்றும் அர்பாஸ் உசேன் ஆகிய  இருமகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையிலான அன்பு குறித்து ரேணு கூறுகையில், ‘ஷாநவாஸ் மிகவும் அழகான, எளிமையான, மகிழ்ச்சியான நபர்’ என்று பலமுறை கூறியுள்ளார்.

காதல், கல்யாணம், குடும்பம், அரசியல் என்று ஓடிய வாழ்க்கையில் மத்திய அமைச்சராக இருந்த போது பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான் போன்ற பிரபலங்களுடன் ஷாநவாசுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அந்த  நேரத்தில் அவரை சில பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் அணுகினர்.  ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்பாடு செய்வதாக தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். ஒரு தொலைக்காட்சி சேனலுடனான உரையாடலில், ஷாநவாஸ் இந்த  தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அந்த பேட்டியில், ‘எனது சினிமா ஆசை குறித்து அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் பேசினேன். அவர் ‘எனக்கு அரசியல்வாதிகளை மட்டுமே  பிடிக்கும்; சினிமா துறைக்கு செல்வதென்றால் அது உன்னுடைய விருப்பம்’ என்றார்.

அவரது விருப்பத்திற்கு மாறாக செயல்பட நான் விரும்பவில்லை. அதனால், சினிமாவில் நுழையும் எனது திட்டத்தை கைவிட்டேன். வாஜ்பாயின் அறிவுரையை கேட்காவிட்டால், பாலிவுட்டில் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை’  என்றார். பீகார் அரசியலில் ஷாநவாசை தற்போது அமைச்சராக்கி இருப்பது பாஜகவின் எதிர்கால அரசியல் வியூகங்களில் ஒன்றாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: