தேசிய கல்வி கொள்கையால் மாநில அரசுகளின் உரிமைகளுக்கு மரண அடி: வசந்தி தேவி - பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் முன்னாள் துணைவேந்தர்

உயர்கல்விக்காக ஆணையம் ஒன்றை அமைக்கப்போவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த ஆணையம் அமைந்தால் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. இது, மாநில அரசுகளின் உரிமைகளுக்கும், அதிகாரத்திற்கும் மரண அடி. தேசிய கல்வி கொள்கையில் சொல்லப்பட்டதை தான் அவர்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றனர். அதில் தான் உயர்கல்வி ஆணையம் தொடர்பாக கூறியுள்ளனர்.  இந்த கல்வி கொள்கை முழுவதுமே மாநில அரசுகளுக்கு பெரும் பின்னடைவு. இந்த கல்வி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு முழுக்க முழுக்க எதிரானது. உயர்கல்வி ஆணையத்தின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளையும் அதன் கீழ் கொண்டு வரப்போகிறார்கள். அதாவது யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ என்கிற தன்னாட்சி அமைப்புகள் ஒன்றாக கொண்டு வரப்படுகிறது. மாநிலங்களுக்கு உயர்கல்வியை பொறுத்தவரை எந்த அதிகாரமும் இருக்காது. ஒரு பல்கலைகழகமோ, கல்லூரியையோ நிறுவுவதற்கும், அவற்றை கண்காணிப்பதற்கும், பாடத்திட்டத்தை உருவாக்கவோ, தேர்வுகளை நடத்துவதற்கோ, சான்றிதழ் கொடுப்பதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் இருக்காது.

மாநில அரசுக்கும் பள்ளி, கல்லூரி, பல்கலைகழகத்தையோ கட்டுபடுத்தும் அதிகாரம் இருந்தது. ஆனால், இந்த ஆணையம் வந்தால் மத்திய அரசிடம் அதிகாரம் சென்று விடும். இது தான் மிகப்பெரிய ஆபத்து. இதை மாநிலங்கள் புரிந்து கொள்ளாமல், இன்னமும் சரியானபடியாக எதிர்க்காமல் இருக்கிறது. எந்த மாநிலமும் இதுவரை புதிய கல்வி கொள்கை எதிர்க்கவில்லை. மும்மொழி கொள்கையை எதிர்த்து நிறைய குரல் எழுப்பப்பட்டன. ஆனால், அந்த மும்மொழி கொள்கை என்பது தேசிய கல்விக்கொள்கையில் சின்ன பகுதி தான். எல்லா பல்கலையிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். நீட் தேர்வில் பாஸ் செய்தால் தான் மருத்துவகல்லூரியில் படிக்க சீட் கிடைக்கும். இனிமேல் பொறியியல், கலை மற்றும் அறியவில் படிப்புகளில் படிக்க வேண்டுமென்றால் நுழைத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் எந்த உயர்கல்வி படிக்கவும் காலடி எடுத்து வைக்க முடியும். அதை கேள்வி கேட்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது. நீட்டை பொறுத்தவரையில், நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எந்த கல்லூரிகளுக்கும், எதை பற்றியும் கேள்வி கேட்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்காது.

பாடத்திட்டம் முழுவதையும் மத்திய அரசு தான் உருவாக்கும். கோர்ஸ் முடிக்கும் போது எல்லா தேர்வுகளும் மத்திய அரசு தான் நடத்தும். எதை வைத்து தேர்வு நடத்துவது என்று மத்தியில் தான் முடிவு செய்யப்படும். ஆராய்ச்சி படிப்புகளுக்கு தனியாக பிரிவு தொடங்கப்போவதாக கூறுகின்றனர். பாடத்திட்டத்தை அவர்கள் எப்படியெல்லாம் கொண்டு வருவார்கள் என்பது தெரியும். இதில், வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் உயர்கல்வி உரியதாக ஆகும். காரணம், நீட்டில் என்ன நடந்தது என்று நமக்கு தெரியும், நீட்டில் பாஸ் ஆக வேண்டுமென்றால் பள்ளி முடித்த பிறகு, 2 வருடம் கோச்சிங் படிக்க வேண்டும். இதற்காக, லட்சக்கணக்கில் பணம் கொட்டினால் தான் நீட்டில் பாஸ் பண்ண முடியும். இன்று இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையே தான் எல்லாவற்றிலும் நடக்கும். வசதிப் படைத்தவர்களுக்கு மட்டும் தான் உயர்கல்வி என்ற நிலை இனி வர வாய்ப்புள்ளது. தமிழகம் போன்ற மாநிலங்கள் மிகப்பெரிய இழப்புக்கு உள்ளாக போகிறது. தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலத்தில் ஒன்று. தேசிய கல்வி கொள்கையில் முக்கியமான குறிக்கோள் என்னவென்றால், தற்போது இந்தியாவில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் 26.3 சதவீதம் என்ற நிலை தான் உள்ளது.

இதை 2030ல் 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது தான் ெகாள்கையின் நோக்கம். ஆனால், தமிழகத்தில் 49 சதவீதத்தை எட்டி விட்டோம். ஆனால், இந்த 49 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் தமிழக அரசுக்கு எந்த அதிகாரம் இருக்கப்போவதில்லை. முழுக்க, முழுக்க தனியார் மயம், வணிகமயவாவது இந்த கொள்கையின் அடித்தளம். எல்லாமே தனியார் கைக்கு போய் விடும். யாரை வேண்டுமென்றாலும் அவர்கள் நியமிக்கலாம். கல்லூரிகளுக்கான தரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்த மாதிரியாக தமிழகம் போன்ற மாநிலங்கள் மிக அதிகமாக பாதிக்கப்படும். எந்தெந்த வகையில் இந்துத்துவத்தை புகுத்த முடியுமோ அந்த வகையில் அவர்கள் புகுத்துவார்கள். மொழியில் புகுத்துவார்கள். ஒரே நாடு ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை கொண்டு வருவதற்கு இந்த உயர்கல்வி பயன்படுத்தப்படும்.

மாநில அரசு முழுக்க முழுக்க புதிய தேசிய கல்வி கொள்கை 2020யை நிராரிக்க வேண்டும். நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்  என்று கூற வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் அவர்களது காலடியில் விழுந்து கிடப்பதால் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே செய்வார்கள். அவ்வாறு செய்தால் தமிழக  குழந்தைகள், இளைஞர்கள் சமுதாயத்துக்கு செய்யும் துரோகம். எனவே, தேசிய கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பெரும்பாலான உறுப்பினர்கள் கூக்குரல் எழுப்ப வேண்டும். ஆனால், எதையும் செய்யவில்லை. இந்தியா முழுவதும் நீட்போன்று உயர்கல்விக்கு ஒரே தேர்வு நடத்தப்போகிறார்கள். தமிழகத்தில் நிறைய கல்லூரிகள், பல்கலைக்கழகம் பல காலமாக நிறுவி வந்திருக்கிறோம். பீகார் போன்ற மாநிலங்களில் ஒன்றிரண்டு இருந்தால் இங்கு 20, 25 கல்லூரிகள் இருக்கிறது. அதனால், மற்ற மாநில மாணவர்கள் தமிழகத்துக்கு படிக்க வருவார்கள். யாரும் கேள்வி கேட்க முடியாது.

மத்திய அரசு பட்ஜெட்டில் கல்விக்காக 6 சதவீதம் நிதியை குறைத்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் மிகவும் குறைவு. உலக சராசரியில் குறைவாக உள்ளது. 191 நாடுகளை கல்வியில் பட்டியலிட்டுள்ளனர். அதில், இந்தியாவின் ரேங்க் 145. மற்ற நாடுகளில் நம்மை விட மிக அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளனர். மத்திய அரசின் கைக்கு சென்று விட்டால் அவர்கள் உயர்கல்விக்கு நிதி ஒதுக்க மாட்டார்கள். எல்லாமே தனியார் மயம் ஆகிவிடும். கட்டணத்தை நீங்களே ஏற்றிக்கொள்ளுங்கள். அரசு ஒன்றும் தராது என்கிற நிலைமை தான் வரும். தேசிய கல்வி கொள்கையில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு என்ற வார்த்தையே இல்லை. அந்த வார்த்தையே பயன்படுத்தவில்லை.

இந்தியாவில் காலம், காலமாக கல்வி மறுக்கப்பட்டவர்கள், மிக கொடூரமான சாதி அமைப்பில், பெண்ணடிமையில் முழ்கி கிடக்கின்ற சமுதாயம் மேலே கொண்டு வருவதற்கு இட ஒதுக்கீடு என்று இல்லாமல் கல்வியில் எந்த முன்னேற்றமும் கிடைக்கவே கிடைக்காது. மேலே இருக்கிற சாதிகள் தான் எல்லாவற்றையும் தட்டி விட்டு போவார்கள். இட ஒதுக்கீட்டை மறுக்கும் மத்திய அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்புகளுக்கு மட்டும் 10 சதவீதம் என 2 வாரத்தில் பில் பாஸ் செய்து அமல்படுத்தி விட்டனர். இட ஒதுக்கீட்டின் மூலம் தான் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி என எல்லா குழந்தைகளும் மேலே வந்தனர். இனி எல்லா கதவுகளும் அடைக்கப்படும். இட ஒதுக்கீடு இல்லாமல் போகும். தேசிய கல்வி கொள்கை மேலே இருக்கிறவர்களுக்கு மட்டும் தான் கல்வி கற்க சாத்தியமாக இருக்கும்.

Related Stories: