குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு புனரமைக்காததால் ஜல்லி சாலையாக மாறிய சாம்பியன் சாலை

தங்கவயல்: தங்கவயலில், சாம்பியனில் உள்ள கல்லறை சாலையில் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட முக்கிய சாலை சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. தங்கவயல் சாம்பியன் கல்லறை தோட்டத்தில் இருந்து டெனன்ஸ் சுரங்கம் செல்லும் சாலையில் குடிநீர் விநியோகம் செய்ய குழாய்கள் பதிக்கும் பணி நடந்த போது, சாலை சேதமடைந்தது. சேதமடைந்த சாலையை சீரமைக்கபடாததால் போக்குவரத்தில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அம்ரூத் திட்டத்தில் பேத்தமங்கலம் ஏரியில் இருந்து தங்கவயலுக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டது. பைப் லைன் வழியாக சாம்பியன் கல்லறை தோட்டத்தில் இருந்து கில்பர்ட்ஸ் சுரங்கம் செல்லும் முக்கிய சாலையில் குடி நீர் குழாய்கள் பதிக்கப்பட்டது. இதனால் அந்த பாதை குண்டும் குழியுமாக சேதமடைந்தது.

மழை செய்த போது சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. சாம்பியன் கல்லறை தோட்டத்திற்கு வரும் இறுதி ஊர்வலங்கள் இந்த சாலையில் வரும் போது பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். குழாய் பதிக்கும் ஒப்பந்ததாரர், சாலையை சீரமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பல முறை நகரசபை மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் சார்பில் கோரிக்கை விடுத்ததும் சாலை தற்காலிகமாக மண் நிரப்பி அதன் மீது ஜல்லி கொட்டப்பட்டது. பின்னர் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு தார் ஊற்றும் பணி கடந்த வாரம் தொடங்கியது. சாலையில் ஒரு துண்டு அளவே தார் ஊற்றப்பட்டது. பின்னர் பணி தொடரவில்லை. சாலை அமைக்க கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் சாலையில் சிதறி கிடக்கின்றன. கல்லுரி மற்றும் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் முக்கிய சாலையான இந்த சாம்பியன் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: