மந்த கதியில் நடக்கும் தடுப்பணை பணி தாமிரபரணி ஆற்றுநீர் உப்பாக மாறியது-குடிநீர் ஆதாரங்கள் பாதிப்பு

நித்திரவிளை :  குமரி மேற்கு  மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய நீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு  விளங்குகிறது. இந்த ஆறு கடலில் கலக்கும் தேங்காப்பட்டணம் பகுதியில் கடந்த 2005ம்  ஆண்டு மீன்பிடி துறைமுக பணிகள் தொடங்கின. அப்போது விசைப்படகுகள் சென்று வர ஆறும் கடலும் சேரும் பகுதி ஆழப்படுத்தப்பட்டது.

இதனால் மழை பெய்யாத பிப்ரவரி,  மார்ச்,  ஏப்ரல்,  மே,  மாதங்களில் கடல் நீர் ஆற்றில் புகுந்து விடுகிறது. 2014ம் ஆண்டு குழித்துறை சப்பாத்து பாலம் வரை  சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் ஆற்றுநீர் உப்பாக மாறியது.

இதனால்  79 கடலோர கிராம குடிநீர் திட்டம், களியக்காவிளை - மெதுகும்மல் கூட்டு  குடிநீர் திட்டம், ஏழதேசம் - கொல்லங்கோடு கூட்டு குடிநீர் திட்டம்,  புதுக்கடை கூட்டு குடிநீர் திட்டம், 19 வழியோர குடிநீர் திட்டம், 17  பேரூராட்சிகளின் குடிநீர் திட்டம், வாவறை, மங்காடு, விளாத்துறை, பைங்குளம்,  முஞ்சிறை ஆகிய ஊராட்சிகளின் குடிநீர் திட்ட உறை கிணறுகள்  உப்பாக மாறியது. ஆற்றின் இரு  பக்கமும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நிலத்தடி நீர் உப்பாக மாறியது.  இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு பெரும் அவதிப்பட்டனர்.  

 எனவே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி கடல் நீர் புகுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தாமிரபரணி ஆற்றின்  குறுக்கே பரக்காணி - மணலிக்கடவு பகுதியில் ரூ. 15 கோடியே 37 லட்சம் செலவில் தடுப்பணை கட்டும் பணிகளை 4/3/2019 அன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி  மூலம், தொடங்கி  வைத்தார்.

இதற்கிடையே 2005ம் ஆண்டு மீன்பிடி துறைமுக பணிகள் ஆரம்பித்த காலத்தில் தடுப்பணை கட்ட தேர்வு  செய்யப்பட்ட ஆற்றின் கரையோரத்தில் தனியார் ஐஸ்  பிளான்ட், தனியார் படகு தளம், சொகுசு விடுதிகள் போன்றவை அமைக்கலாம் என்று கருதி குறைவான விலையில் உள்ள இடங்களை நில  மாபியாக்கள் வாங்கி குவித்தனர். இந்நிலையில் தடுப்பணை அமைந்தால் இந்த நிலத்திற்கு மவுசு போய்விடும் எனக்கருதி சிலரை தூண்டி விட்டு பணியை தாமதப்படுத்தினர்.

 இதனால்  காஞ்ஞாம்புறத்தை சேர்ந்த பால்ராஜ்  என்பவர் மதுரை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து 2019 ஏப்ரல் மாதம் தடுப்பணை கட்டும் பணி  தொடங்கியது. இந்த பணியின் கால  அளவு 24 மாதங்கள்  ஆகும். ஆனால் இதுவரை 50 சதவீதம் பணிகள் கூட நிறைவடையாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.  

தற்போது  ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் மங்காடு சப்பாத்து பாலம்  வரை 5 கிலோ மீட்டர் தூரம் ஆற்றுநீர் உப்பாக மாறியுள்ளது. இதனால் வாவறை,  மங்காடு, முஞ்சிறை, பைங்குளம், ஏழுதேசம் பேரூராட்சி, புதுக்கடை பேரூராட்சி  ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உப்புநீரை விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்  நிலத்தடிநீர் உப்பாக மாறி தனியார் கிணறுகள், போர்வெல் உப்பாக மாறும் நிலை  ஏற்பட்டுள்ளது. ஆகவே ஆற்றில் உப்பு தன்மையை குறைக்க பேச்சிப்பாறை மற்றும்  பெருஞ்சாணி அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விட  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: