சென்னையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் வந்தனர் சட்டையில் ‘ஜிப்’ வைத்த பாக்கெட்டுகளில் மறைத்து கடத்திய 3 கிலோ தங்கம் பறிமுதல்: ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் சிக்கினர்

சேலம்: பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கு வெள்ளி, தங்கநகைகளை முறையாக வரி செலுத்தாமல் ரயில்களில் கடத்தி வருவதாக ஆர்பிஎப் கமிஷனர் சிவசங்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் ஆர்பிஎப் போலீசார் சேலம் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை நடத்தி, கடந்த வாரம் 5வது பிளாட்பார்ம்மில், 80 கிலோ வெள்ளி நகைகளுடன், சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை மடக்கி, மாநில வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று பகல் 11 மணியளவில் 4வது பிளாட்பாரத்தில் சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் ஆர்பிஎப் போலீசார் மடக்கினர். அப்போது, சட்டையை கழற்றச் செய்து சோதனையிட்டனர்.

அதில், உள்ளே போட்டிருந்த டீ சர்ட்டில் பல ஜிப்புகள் வைத்து பாக்கெட்டுகளுக்குள் நகைகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள்,  ராஜஸ்தானை சேர்ந்த பாகீரத் (32), சிவராஜ் (22) என்பதும், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு நகை மொத்த வியாபார கடையில் இருந்து, சேலத்திற்கு நகையை கடத்தி வந்ததும் தெரிந்தது. 1.41 கோடி மதிப்புள்ள 3 கிலோ 141 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வித வரியும் செலுத்தாமல், முறைகேடாக கடத்தி வந்து ஏஜென்டுகள் மூலம் நகையை விற்க ஏற்பாடு செய்திருப்பதும் தெரிந்தது. இந்த நகையை சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தினேஷ்குமார் கொடுத்து அனுப்பியதையும் போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து நகை வணிக வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: