பெட்ரோல், டீசல் விலை உயர்வே அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு காரணம்!: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு..!!

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்து பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் விலை 730 ரூபாயாக உயர்ந்துவிட்டது என்றார். மேலும் பெட்ரோல், டீசல் விலை கூடியதால் விலைவாசி உயர்ந்துள்ளதாக புகார் தெரிவித்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவ படிப்புகளுக்கு மத்திய தொகுப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய பாஜக அரசு மறுத்துவிட்டதாக அவர் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், நீதிமன்றம் உத்தரவிட்டும் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. அகில இந்திய கோட்டாவில் மருத்துவ படிப்புகளில் 50 இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

திமுக சார்பில் கடிதம் எழுதி வலியுறுத்தினோம். ஆனால் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மறுத்துவிட்டனர். இதனால் மருத்துவப்படிப்பு கிடைக்காமல் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் காத்துள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என குறிப்பிட்டார். தொடர்ந்து அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பேசுகையில், மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். நாடு முழுவதும் 2014ம் ஆண்டு 387 மருத்துவ கல்லூரிகள் இருந்ததாகவும் தற்போது 562 மருத்துவ கல்லூரிகள் என உயர்ந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். இதில் தமிழகத்தில் மட்டும் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டதாக ரவீந்திரநாத் குமார் கூறினார்.

Related Stories: