அயோத்தி மசூதி நிலத்தை உரிமைகோரிய மனு தள்ளுபடி: அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் மசூதி மீதான நில உரிமைகோரும் மனுவை அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு அனுமதி தந்த உச்சநீதிமன்றம், மசூதி கட்ட மாற்று இடம் வழங்குமாறு உபி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனால் தானிப்பூர் கிராமத்தில் மசூதிக்கு இடம் வழங்கப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், ‘மசூதி கட்டப்படும் 5 ஏக்கர் இடம் எங்களுக்குச் சொந்தமானது’ என்று டெல்லியைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் கடந்த 3ம் தேதி அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நாடு சுதந்திரமடைந்தபோது பஞ்சாபிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குத்தகைக்கு அரசு நிலம் வழங்கியதாகவும், அப்போது எங்கள் தந்தைக்கு வழங்கப்பட்ட 28 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் தற்போது மசூதி கட்டப்பட்டு வருவதாகவும் மனுவில் கூறியிருந்தனர். குத்தகை காலம் முடிந்தபிறகும் அந்த நிலம் எங்கள் பராமரிப்பில் இருந்தது என்றும் கூறியிருந்தனர். இந்த மனு நேற்று நீதிபதிகள் டிகே உபாத்யாய் மற்றும் மனீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரமேஷ் குமார் சிங். ‘மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் பிளாட் எண்ணும், மசூதி கட்டப்படும் பிளாட் எண்ணும் வேறு வேறு’ என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து ‘எந்த ஆதாரங்களும் இல்லாமல் அவசர கதியில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று டெல்லி சகோதரிகளின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Related Stories: