உத்தரகாண்ட் பயங்கர வெள்ளப் பெருக்கில் மாயமான 171 பேரை தேடும் பணி தீவிரம்: 26 சடலங்கள் மீட்பு; சுரங்கத்தில் சிக்கிய 34 பேர் கதி?

டேராடூன்: உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 171 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் நந்தா தேவி பனிப்பாறை உருகி உடைந்தது. இதில் தவுலி கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் கங்கை ஆற்றின் கரையோரம் இருந்த ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டன. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலங்கள், நீர்மின் திட்ட கட்டமைப்புக்கள் உள்ளிட்டவை பெரும் சேதமடைந்தது.

ரிஷி கங்கா மற்றும் ரெய்னி நீர்மின் நிலைய திட்ட பணிகளில் ஈடுபட்டு இருந்த 153 தொழிலாளர்களும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 16 சடலங்களை மீட்பு குழுவினர் கண்டறிந்தனர். தபோவான் சுரங்கத்தில் சுமார் 34 பேர் சிக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான பணிகள் நேற்று முன்தினம் இரவு முதல் மும்முரமாக நடந்து வருகின்றது. 250 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கத்தில் 80 மீட்டர் வரை உள்ள சேறு, சகதி உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 300 பேர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தில் சிக்கியுள்ள அனைவரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று அளித்த பேட்டியில்,” இன்னும் 171 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ரெய்னி உட்பட இரண்டு கிராமங்கள் பிற பகுதிகளோடு தொடர்பு கொள்ள முடியாதபடி துண்டிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது” என்றார்.

* ரூ.700 கோடி நஷ்டம்

உத்தரகாண்ட்டில் தவுலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றில் அமைக்கப்பட்டு இருந்த ரிஷி கங்கா மற்றும் விஷ்ணுகத் நீர்மின் நிலையங்கள் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டு சேதமடைந்தன. இதன் காரணமாக ரூ.700கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* வெப்பமயமாதலால் ஏற்பட்ட விளைவு

நந்தாதேவி பனிப்பாறை உடைந்ததற்கான காரணத்தை ஆராய டிஆர்டிஓஇ இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். ஜோஷிமாத் சென்றுள்ள அவர்கள், கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் இந்த பேரழிவு நிகழ்ந்திருக்கலாம் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பாகும். அதே சமயம், இமயமலைப் பகுதியில் இதுபோன்ற பனிப்பாறை உருதல் என்பது அரிய நிகழ்வு மட்டுமல்ல, ஆபத்தானதும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: