அதிமுக கோஷ்டி மோதலால் ரேஷன் கடைக்கு டபுள் திறப்பு விழா

அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி கோஷ்டி மோதல் காரணமாக, காங்கயம் அருகே ஒரே ரேஷன் கடைக்கு இரு முறை திறப்பு விழா நடத்தப்பட்டது. காங்கயம் தொகுதியில் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு  அணியாகவும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஒரு அணியாகவும் செயல்பட்டு  வருகிறார்கள். இது கட்சி நிகழ்ச்சியிலும் எதிரொலிக்கும். கோஷ்டி அரசியலை  முடிவுக்கு கொண்டுவர கடந்த மாதத்தில் இரு தரப்பினரையம் வரவழைத்து கூட்டம்  நடத்தப்பட்டது. காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என். நடராஜ் தனக்குதான் சீட் என தொகுதி முழுவதும் இப்போதே பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.  மேலும் எந்த நிகழ்ச்சி என்றாலும் தன் தலைமையில் நடக்கவேண்டும் என  நினைக்கிறார். பொள்ளாச்சி ஜெயராமனும், எஸ்.பி.வேலுமணியும் என்.எஸ்.என். நடராஜ் பக்கம் இருப்பதாக தெரிகிறது.

  இந்நிலையில் காங்கயம் வட்டம், கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கம் மூலம் தொட்டியபாளையத்தில் பகுதி நேர புதிய  நியாயவிலைக் கடை திறப்பு விழா கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இதில் கூட்டுறவு  சங்கத்தின் தலைவரும், திருப்பூர் மாவட்ட வர்த்தக அணி பொருளாளருமான  கே.வி.பி. சின்னச்சாமி கலந்துகொண்டு பகுதி நேர நியாய விலைக்கடையை திறந்து வைத்தார்.  பின்பு பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6ம்  தேதி காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என். நடராஜ்  தொட்டியபாளையத்தில் அதே நியாயவிலைக் கடையினை மீண்டும் திறந்து வைத்தார்.  ஒரே கடையை இரு முறை திறக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்க தலைவர்  கே.வி.பி.சின்னச்சாமி கூறியதாவது: கடந்த 3ம் தேதியன்று புதிய நியாயவிலைக்  கடையை திறக்க வேண்டும் என மாவட்டத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

அதன்படி திறப்புவிழா நடத்தி அன்றே பொதுமக்களுக்கு 18 மூட்டை அரிசி உள்பட  பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ் தன் தலைமையில் மீண்டும் திறப்பு விழா நடத்தவேண்டும் என  தெரிவித்தார். அதனால் மீண்டும் 6ம் தேதி திறப்புவிழா செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: