காஜிப்பூர் எல்லையில் ஆணிப்பட்டை அகற்றம்: போலீஸ் விளக்கம்

புதுடெல்லி: காஜிப்பூர் எல்லை பிரதான சாலையில் பதித்த ஆணிப்பட்டைகளை தொழிலாளர்கள் அகற்றியதால், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பரபரப்பு அடைந்தனர். இடம் மாற்றி பொருத்த அகற்றுவதாக போலீசார் கூறியதும், விவசாயிகள் வாட்டம் அடைந்தனர். டெல்லியின் காஜிப்பூர் எல்லையை மையமாக கொண்டு பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகய்த் தலைமையில் ஆயிரக்கணக்கில் அணி திரண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் கும்பல் கூடுவதை தடுக்க, அந்த பகுதியில் இரும்பு, கான்கிரீட் தடுப்புகள், தடுப்புகள் மீது சுருள் முள்கம்பி, மேலும் சாலைகளின் குறுக்கில் இரும்பு ஆணிப்பட்டை என பல தடைகளை மத்திய உள்துறை உத்தரவின் பேரில் போலீசார் அமைத்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே சாலையில் பொருத்திய கூரான ஆணிப்பட்டை தகடுகளை, தொழிலாளர்களை அமர்த்தி போலீசார் நேற்று அகற்றும் வீடியோ, சமுக வலைதளங்கலில் நேற்று வைரலானது. மேலும் நேரில் பார்த்த விவசாயிகளும் பரபரப்பு அடைந்தனர். அதையடுத்து ஆணிப்பட்டை அகற்றம் குறித்து காவல்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக கிழக்கு டெல்லி காவல்துறை துணை கமிஷனர் தீபக் யாதவ் கூறுகையில், ‘‘டெல்லி - உத்தரப்பிரதேச மாநில காஜிப்பூர் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே உள்ளபடி கடுமையான நிலையில் எந்த மாற்றாமும் இன்றி நீடிக்கும். ஆணிப்பட்டைகளை அகற்றும் பணி, அவற்றை தோதான இடத்தில் மாற்றி பொருத்துவதற்காகும். டிரோன்களை பயன்படுத்தி கூட்டத்தை கண்காணிக்கும் நடவடிக்கையும் தொடங்கி உள்ளோம்’’, எனக் கூறியுள்ளார்.

Related Stories: