மருத்துவப்பணிகள் இணை இயக்குனரை மிரட்டிய தனியார் கல்லூரி உரிமையாளர் போலீஸ் வழக்குப்பதிந்து வலை வீச்சு வேலூரில் அரசு அலுவலகத்தில் புகுந்து

வேலூர்: வேலூரில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனரை, அலுவலகத்தில் புகுந்து மிரட்டிய, தனியார் நர்சிங் கல்லூரி உரிமையாளர் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த நெல்வாய் கிராமத்தில் செயின்ட் ஜான்ஸ் என்ற பெயரில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சேர்ந்த மாணவி ஒருவர், அங்கிருந்து விலகிய நிலையில் தான் கல்லூரியில் படிப்பதற்காக கட்டிய பணம் ₹1 லட்சத்து 10 ஆயிரத்தையும் தனது சான்றிதழையும் திருப்பித்தரும்படி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுக்கவே, இதுதொடர்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்து அணுகியதாக தெரிகிறது. இந்த மனுவின் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.அதன்படி, கடந்த 9ம் தேதி சம்பந்தப்பட்ட செயின்ட் ஜான்ஸ் நர்சிங் கல்லூரி முதல்வரை விசாரணைக்கு வருமாறு மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி அழைத்துள்ளார். இதையடுத்து அன்று மாலை வேலூர் வேலப்பாடியில் உள்ள மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்த நர்சிங் கல்லூரி உரிமையாளர் விஜயகுமார், கல்லூரி நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் அங்கு பணியில் இருந்த இணை இயக்குனர் கண்ணகியிடம், ‘எப்படி எங்களை விசாரணைக்கு அழைக்கலாம். நாங்கள் யார் தெரியுமா? ஒரு பெண்மணி எங்களை விசாரணைக்கு அழைப்பதா?’ என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவரை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியதாகவும் கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த இணை இயக்குனர் கண்ணகி, செல்போனில் போலீசாரை தொடர்பு கொள்வதை பார்த்ததும் கல்லூரி உரிமையாளரும், அவருடன் வந்தவரும், இணை இயக்குனர் அலுவலகத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.இதுதொடர்பாக இணை இயக்குனர் கண்ணகி கொடுத்த புகாரின்பேரில் தெற்கு போலீசார், கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நர்சிங் கல்லூரி உரிமையாளர் உட்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்….

The post மருத்துவப்பணிகள் இணை இயக்குனரை மிரட்டிய தனியார் கல்லூரி உரிமையாளர் போலீஸ் வழக்குப்பதிந்து வலை வீச்சு வேலூரில் அரசு அலுவலகத்தில் புகுந்து appeared first on Dinakaran.

Related Stories: