விவசாயிகளின் போராட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம்; தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: கிரேட்டா தன்பர்க் கருத்துக்கு மத்திய அரசு விளக்கம்

டெல்லி: சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில் சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ’’இந்தியாவில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாங்கள் ஒற்றுமையுடன் இணைந்து நிற்கிறோம்’’ என்று அவர் குரல் கொடுத்தார். சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்ப்பாக மத்திய அரசு கிரேட்டா தன்பர்க்குக்கு எழுதியுள்ள கடிதத்தில்; விவசாயிகளின் போராட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம்.

விவசாயிகள் போராட்டத்தில் சர்வதேச அளவில் ஆதரவை பெற சில குழுக்கள் முயற்சி செய்கின்றன; விவசாயிகளை திசை திருப்ப சில குழுக்கள் முயற்சி செய்கின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் சிறிய அளவிலான விவசாயிகளே போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு மதிப்பளித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளது.

Related Stories: