ஓசூர் சானமாவு வனப்பகுதியில் தென்னை மரங்களை நாசம் செய்த யானை-விரட்டியடிக்க விவசாயிகள் கோரிக்கை

ஓசூர் : ஓசூர் சானமாவு வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை இரவு நேரத்தில் தென்னை மரங்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் சுற்றி திரிந்த 40 யானைகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கும், கடந்த வாரம் 50 யானைகள் தேன்கனிக்கோட்டை வழியாக ஜவளகிரி காப்பு காட்டிற்கும் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

தற்போது ஓசூர் சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானை உட்பட 8 யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் 2 யானைகள் தனியாக பிரிந்து சுற்றி வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரத்தில் உணவிற்காக வனப்பகுதியை விட்டு கிராம பகுதிக்கு வந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள ராகி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்கின்றன. நேற்று முன்தினம் இரவு பீர்ஜேப்பள்ளி பகுதியில் விவசாய தோட்டத்திற்கு வந்த ஒற்றை யானை தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

மேலும் சானமாவு காட்டில் முகாமிட்டுள்ள 8 யானைகளும் சானமாவு, பீர்ஜேபள்ளி, நாயகனபள்ளி, ராமாபுரம், கொம்மேபள்ளி உள்ளிட்ட வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வனத்தை ஒட்டிய கிராம பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: