அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் திட்ட பணி மும்முரம்: பயன்பாட்டுக்கு வருவது எப்போது என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குளித்தலை: அய்யர்மலை கோயில் அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்ல ரோப்கார் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு மும்முரமாக நடந்து  வருகிறது. இன்னும் சில தினங்களில் சோதனை ஓட்டமும், அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் உள்ளது சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது.  இக்கோயிலில் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல 1017 படிகள் ஏறி செல்ல வேண்டும்.இந்நிலையில் குடி பாட்டுக்காரர்கள் பொதுமக்கள் ரத்தினகிரீஸ்வரரை தரிசிக்க வரும் பொழுது முதியவர்கள், சிறுவர்கள் மலைஉச்சிக்கு செல்வது மிக  சிரமமாக இருந்து வந்தது. இந்நிலை கருதி அப்போதைய குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மாணிக்கம், முதல்வராக இருந்த  கருணாநிதியிடம் கொண்டு சென்று பரிந்துரை செய்து அதற்கான உத்தரவு பெறப்பட்டது. அதன் பிறகு முதன்முதலில் இந்து அறநிலையதுறை சார்பில்  ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடி பாட்டுக்காரர்கள், பக்தர்கள் வழங்கிய ரூ 2 கோடி ஆக மொத்தம் 4 கோடி நிதி பெறப்பட்டு  அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2.2.2011ல் அப்போதைய அறநிலைய துறை அமைச்சர் முத்துக்கருப்பன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா  நடைபெற்றது. ரோப்கார் பணி தொடங்கும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதேபோன்று அடிவாரத்திலும் கட்டிடம் கட்டப்பட்டு அடிவாரத்தில் இருந்து உச்சி மலைக்கு செல்லும் வகையில் கம்பிவடம் வந்து சேர்ந்தன. அதனால்  பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  அய்யர்மலைக்கு வந்த பொழுது ரோப்கார் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பணிகள் விரைந்து  முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனால் கடந்த சித்திரை தேர் திருவிழாவிற்கு ரோப் கார் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  வரவில்லை. செப்டம்பர் மாதம் என்றனர், டிசம்பர் என்று கூறினர். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 24ம்தேதி கரூர் கலெக்டர் மலர்விழி, அய்யர்மலை ரோப்கார் திட்டத்தினை ஆய்வு செய்தார். ரோப் கார் ஒப்பந்த  பொறியாளர், அறநிலையதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதியாக பிப்ரவரி 24ம் தேதி முழுமையாக ரோப்கார் பணிகள்  முடிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்படி ரோப்கார் பணியில் தற்போது அய்யர்மலை அடிவாரத்திலிருந்து உச்சிக்கு  ரோப்கார் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் பணிகள் முடிக்கப்பட்டு முதலில் பெட்டிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம்  நடத்தப்படும். அதன் பிறகு முறையான உத்தரவு பெறப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிகிறது. எது எப்படியோ பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு ரோப்கார் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் பக்தர்களின் கோரிக்கையாகும்.

Related Stories: