பலாத்கார வழக்குகளில் சர்ச்சை தீர்ப்புகள் : பெண் நீதிபதியின் பதவி உயர்வு ரத்து: உச்ச நீதிமன்ற கொலிஜியம் நடவடிக்கை

புதுடெல்லி; பாலியல் பலாத்கார வழக்குகளில் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய நாக்பூர் உயர் நீதிமன்ற கிளை கூடுதல் பெண் நீதிபதியின் பதவி உயர்வை உச்ச நீதிமன்ற கொலிஜியம் ரத்து செய்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை கூடுதல் நீதிபதியாக இருப்பவர் புஷ்பா ஜெனிடிவாலா. . ‘ஒரு உடலை மற்றொரு உடலால் தொடுவதுதான் பாலியல் வன்முறை. துணியை கழற்றாமல் பெண்ணின் உடலை தொடுவது பாலியல் வன்முறை ஆகாது,’  என்று சிறுமி சம்பந்தப்பட்ட பலாத்கார வழக்கில் சில நாட்களுக்கு அவர் தீர்ப்பு அளித்து, குற்றவாளியை விடுதலை செய்தார். இது, பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்த மத்திய அரசின் அட்வகேட் ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘இதுபோன்ற தீர்்ப்புகள் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடும்,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் முறையிட்டார். இதையடுத்து, புஷ்பாவின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

அதே நேரம், இந்த தீர்ப்புக்கு முன்னதாக கடந்த 15ம் தேதி மற்றொரு அதிரடி தீர்ப்பையும் கூடுதல் நீதிபதி புஷ்பா அமர்வு வழங்கியுள்ளது. ஐந்து வயது சிறுமியை 50 வயது நபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த வழக்கில், ‘பாதிக்கப்பட்டவரின் (சிறுமி) கைகளை குற்றம்சாட்டப்பட்டவர் பிடித்து இருந்தார் என்பதாலும், தனது பேன்ட் ஜிப்பை திறந்து வைத்திருந்தார் என்பதாலும் மட்டுமே அவரை குற்றவாளியாக கருதி விட முடியாது,’ என்று கூறிய, அவருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறை தண்டனையை 5 மாதமாக குறைந்து நீதிபதி புஷ்பா உத்தரவிட்டார். இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 20ம் தேதி தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் நடந்த கொலிஜியம் கூட்டத்தில், கூடுதல் நீதிபதியாக உள்ள புஷ்பா ஜெனிடிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. அவருடைய சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் காரணமாக, இந்த பரிந்துரையை கொலிஜியம் தற்போது அதிரடியாக ரத்து செய்துள்ளது.

நீதிபதி புஷ்பா யார்?

* மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ள பரத்வாடாவில் மார்ச் 3, 1969ல் நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா பிறந்தார்.

* பல்வேறு வங்கிகள், காப்பீடு நிறுவனங்களின் வக்கீல் குழுவில் இடம் பெற்றார்.

*  அமராவதி பல்கலை மற்றும் பல்வேறு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி இருக்கிறார்.

* கடந்த 2007ல் மாவட்ட நீதிபதியாக நேரடி நியமனம் செய்யப்பட்டார்.

* கடந்தாண்டு, பிப்ரவரி 13ம் தேதி நாக்பூர் உயர் நீதிமன்ற கிளையின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

Related Stories: