மகாத்மா காந்தியின் கொள்கைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து ஊக்கத்தை அளிக்கும் : பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி : மகாத்மா காந்தியின் கொள்கைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து ஊக்கத்தை அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இவரது நினைவு நாள் தியாகிகள் தினமாகவும் போற்றப்படுகிறது.

மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.காந்தி சிலைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மகாத்மா காந்தியின் கொள்கைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து ஊக்கத்தை அளிக்கும். தியாகிகள் தினத்தன்று, இந்தியாவின் சுதந்திரத்துக்காகவும், ஒவ்வொரு இந்தியரின் நல்வாழ்விற்காகவும் உயிர் தியாகம் செய்த பெண்கள், ஆண்கள் என அனைவரின் வீர தியாகங்களையும் நினைவு கூர்கிறோம், எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் வாழ்க்கையே என் செய்தி என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: