சர்வதேச விமான கண்காட்சியை முன்னிட்டு பிஐஏஎல் விமான சேவை நாளை முதல் 7 நாட்கள் மாற்றம்

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியை முன்னிட்டு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவையில் நாளை முதல் 7 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை காண இந்தியா மட்டுமில்லாமல், உலகின் பல நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள். இவ்வாண்டிற்கான 13வது சர்வதேச விமான கண்காட்சி வரும் பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி 5ம் தேதி வரை நடக்கிறது. விமான கண்காட்சியை வரும் பிப்ரவரி 3ம் தேதி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார். கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் விமான கண்காட்சியின் போது, வானில் எந்த விமானங்களும் பறக்காமல் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நாளை தொடங்கி 7 நாட்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், பிப்ரவரி 1 மற்றும் 5ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், விமான சேவைகள் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதனிடையில் விமான கண்காட்சியில் பங்கேற்கும் விமானங்கள் நேற்று முதல் பெங்களூரு விமான நிலையத்திற்கு வர தொடங்கியுள்ளது. வரும் 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் எலகங்கா விமானப்படை பயிற்சி மைதானத்தில் சோதனை அடிப்படையில் வானில் சாகசத்தில் ஈடுபடுகிறது. இந்த சமயத்தில் பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பைஅதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: