சின்னாளபட்டியில் 115 வருடம் பழமையான பள்ளி தரம் உயருமா?-மாணவர்கள் 10ம் வகுப்புடன் கல்வியை நிறுத்தும் அவலம்

சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் 115 வருடம் பழமைவாய்ந்த அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 1906ம் ஆண்டு ஊரின் நடுவே மார்க்கெட் அருகே அரசு துவக்கப்பள்ளி ஒன்று துவக்கப்பட்டது. 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்பிக்கப்பட்ட பள்ளி அதன்பின்பு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது.

1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டு கண்ட பள்ளியின் நிலைமை கவலைக்கிடமாக போகவே ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமி முயற்சியால் 2010ம் வருடம் இப்பள்ளி நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது. பள்ளிக்காக ஆர்.எம்.எஸ்.ஏ திட்டம் மூலம் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பாக ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு 6 முதல் 10ம் வகுப்புவரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர், ஒரு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 140 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 10 வருடத்திற்கு மேலாகியும், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தாததால் இப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்துச் செல்லும் மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்ந்து படிக்க அருகில் உள்ள செட்டியபட்டி, என்.பஞ்சம்பட்டி, முருகம்பட்டி, ஆத்தூர் ஆகிய ஊர்களை தேடிச்செல்லும் அவலநிலையில் உள்ளனர். இதனால் கிராமப்புற மாணவிகள் 10ம் வகுப்புடன் தங்கள் படிப்பை நிறுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மேலும் சின்னாளபட்டியில் அரசு உயர்நிலை பள்ளியை அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினால் தங்களுக்கு இடமாற்றம் (டிரான்ஸ்பர்) ஏற்படும் என்று கருதி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு, கல்வித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து சின்னாளபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதர்மண்டி கிடக்கிறது

தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளியைச் சுற்றி புதர் மண்டிக்கிடக்கிறது. தலைமை ஆசிரியர் இல்லாததால் பொறுப்பு தலைமை ஆசிரியரே பள்ளியை கவனிக்கும் நிலை உள்ளது. மார்க்கெட் பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வருபவர்கள் பள்ளி வளாகத்தை திறந்தவெளிக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராமசாமி கூறுகையில், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பள்ளியை சுத்தம் செய்யச்சொல்லி கோரிக்கை விடுத்துள்ளோம். அருகில் உள்ள கிராம ஊராட்சிகளில் உள்ள 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு சுத்தப்படுத்துவதாக கூறியுள்ளனர். விரைவில் பள்ளி வளாகத்தை தூய்மை படுத்திவிடுவோம் என்றார்.

Related Stories: