திருவாரூர் நகரில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் தவிப்பு-வழிப்பறி சம்பவங்களால் அச்சம், பீதி

திருவாரூர் : திருவாரூர் நகரில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் நகர் முழுவதும் பொதுமக்கள் இருட்டில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகரில் கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 55 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அதன் பின்னர் தற்போது 10 ஆண்டுகளில் இந்த மக்கள் தொகையானது அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட தலைநகரம் என்பதால் இங்கு கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் உட்பட அரசு துறைகளின் அனைத்து அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

இது மட்டுமன்றி மத்திய அரசின் பல்கலைகழகமும் இயங்கி வருவதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். இதனால் இந்நகருக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நகரின் முக்கிய வீதிகள் என கூறப்படும் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கமலாலயத்தின் 4 கரைகள் மற்றும் பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம், தஞ்சை சாலை உட்பட அனைத்து பகுதிகளிலும் மின்விளக்குகள் சரிவரத் எரியாததால் அனைத்து வீதிகளும் இருட்டில் மூழ்குவதன் காரணமாக இரவு நேரங்களில் இந்த வீதிகளில் பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சம் அடைந்து வருகின்றனர்.

மேலும் தற்போது அதிகாலையில் பெரும்பாலானவர்கள் நடைப்பயிற்சியில் ஈடுபடும் நிலையில் இதுபோன்று இருட்டு சூழல் காரணமாக பெண்களிடம் நகை பறிப்பு சம்பவமும் அவ்வப்போது நடைபெறுகிறது. இதனால் பெண்கள் மத்தியில் பெரும் அச்சம் இருந்து வருகிறது. இது மட்டுமின்றி தற்போது நகரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி செல்லும் அனைத்து பேருந்துகளும் ரயில்வே மேம்பாலத்தில் நின்று செல்வதால் அங்கு பயணிகளின் கூட்டம் இரவு பகலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ரயில்வே மேம்பாலம் அருகிலும் இருந்து வரும் உயர்மட்ட மின்விளக்கு உட்பட தெரு விளக்குகளும் சரியாக எரியாததால் அங்கு இரவு நேரத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.எனவே நகர் முழுவதும் தெருவிளக்குகளை உரிய முறையில் எரிய விடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>