நண்பரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுக்க முதியவரை கொன்று தங்க நகைகள் திருட்டு: வாலிபர் கைது

பெங்களூரு: நண்பரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுக்க முதியவரை குத்தி கொலை செய்து தங்க நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  பெங்களூரு ஊரக மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா டவுன் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்மூர்த்தி (65). இவர் தினமும் காலையில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். இதேபோல் ஜனவரி 16-ம் தேதி காலை சென்றார். அப்படி சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் இவரை தேடிக்கொண்டு குடும்பத்தினர் சென்றனர். அப்போது சாலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் நாகராஜ்மூர்த்தி சடலமாக கிடந்தார்.  அதே போல் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின், கையில் இருந்த மோதிரம் ஆகியவை திருடு போய் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் மறைந்த நாகராஜ்மூர்த்தி குடும்பத்துக்கு நெருக்கமான ராகேஷ் என்ற வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் நண்பரிடம் ₹30 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி கொடுக்க அவர் நெருக்கடி கொடுத்த காரணத்தால் முதியவரை கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை திருடி சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் தங்க நகைகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: