வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது என்பதை அனைவரும் உணரவேண்டும்...! டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

டெல்லி: வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது என்பதை அனைவரும் உணரவேண்டும் என்று புதிய விதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக மக்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பயனர்களின் தனியுரிமை விவகாரம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தது.

ஆனால், வாட்ஸ்அப் செயலி பயனர் தனியுரிமை கொள்கைகளில் மாற்றங்களை அறிவித்த உடன் பலர் எதிர்ப்பு தெரிவித்து, வாட்ஸ் அப் செயலியில் இருந்து வெளியேறினர். வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு மாறியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் பல விளக்கங்களை அளித்திருந்தது. பயனர்களின் தங்களது சொந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்றும், பயனர்களின் குழு விவரங்களை பகிர்ந்து கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்தது. இந்நிலையில் இச்சூழலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பேஸ்புக், வாட்ஸ்அப்புக்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுவில், “புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையானது இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ள மக்களின் தனியுரிமை விதியை மீறுகிறது. அரசின் மேற்பார்வை இல்லாமலேயே வாட்ஸ்அப் பயனரின் தகவல்களை மற்றொரு நிறுவனத்திடம் பகிர்ந்துகொள்கிறது. எனவே இதனை நாட்டில் தடை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது கட்டாயம் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என தெரிவித்துள்ளது.

Related Stories: