போடி அருகே துணைமுதல்வர் வருகைக்காக காத்திருந்த மலைவாழ் மக்கள்-சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அவதி

போடி : போடி அருகே, சிறைக்காடு மலைக்கிராமத்தில் நலத்திட்ட உதவி வழங்க துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவார் என மலைக்கிராம மக்கள் சாப்பாடு, தண்ணீரின்றி 8 மணி நேரம் காத்துக் கிடந்து ஏமாற்றம் அடைந்தனர்.போடி அருகே, கொட்டகுடி கிராம பஞ்சாயத்தில் முதுவாக்குடி, முந்தல், சிறைக்காடு, சோலையூர் ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்குதல், தார்ப்பாய், பிளாஷ்டிக் கூடை என நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, நேற்று காலை 10.30 மணி முதல் 1 மணி வரை நடப்பதாகவும், மாலை 4.30 மணியிலிருந்து அணைக்கரைப்பட்டி, ராசிங்காபுரம், சங்கராபுரம் ஆகிய 3 கிராமங்களில் மினிகிளினிக்குகள் திறந்து வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சிறைக்காடு மலைக்கிராமத்தில் சாமியானா பந்தல் அமைத்து, அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வைத்து மலைக்கிராம மக்களை காலை 8 மணிக்கே அழைத்து வந்தனர்.

ஆனால், நேற்று காலை 8 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்பி ரவீந்திரநாத், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முதல்நிகழ்ச்சியாக குரங்கணி சென்று அங்கிருந்து ஜீப் மூலம் முதுவாக்குடிக்கு நலத்திட்ட உதவி வழங்க சென்றவர்கள் மாலை வரை முந்தல் கிராமத்திற்கு வரவில்லை.

இதனால் முந்தல், சிறைக்காடு, சோலையூர் மலைக்கிராமங்களைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் 8 மணி நேரம் காத்துக் கிடந்து ஏமாற்றம் அடைந்தனர். மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவி என்ற பெயரில் தேர்தலுக்கு ஓட்டு கேட்கும் நிகழ்ச்சியாக நடப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Related Stories: