முதலமைச்சர் பதவியில் இருந்து எந்த நேரத்திலும் நீக்கப்படலாம்!: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அதிருப்தி குரலால் அதிர்ச்சி..!!

பாட்னா: பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து தாம் எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் என்று நிதிஷ்குமார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற பீகார் முன்னாள் முதலமைச்சரும், சம்யுக்த சோசலிசுட் கட்சியின் தலைவருமான கர்ப்பூரி தாக்கூரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நிதிஷ்குமார், கர்ப்பூரி தாக்கூர் கடந்த 70வது -எப்படி பதவி நீக்கப்பட்டாரோ அதுபோல தாமும் பதவிநீக்கம் செய்யப்படலாம் என்று கூறியுள்ளார். கர்ப்பூரி தாக்கூர், அனைத்து தரப்பு மக்களுக்காக உழைத்தவர் என்று புகழாரம் சூட்டிய அவர், தாமும் அனைத்து தரப்பு மக்களுக்காக உழைப்பதால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் முதலமைச்சராக இருக்கும் நித்திஷ், தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பாஜக அனைத்து தரப்பு மக்களுக்கான கட்சி இல்லை என்று நிதிஷ் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ்குமார், எந்த நேரத்திலும் பதவி விலக தயாராக உள்ளார் என்ற மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். 1977ம் ஆண்டில் கர்ப்பூரி தாக்கூர், பீகார் முதலமைச்சராக இருந்த போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும் தாழ்த்தப்பட்டோருக்காகவும் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இதையடுத்து 2 ஆண்டுகளில் அவர் பதவி விலக நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: