வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் 200 கிடாய், 150 சேவல்களை வெட்டி பிரியாணி திருவிழா

திருமங்கலம்: திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயில் பிரியாணி திருவிழாவில், 250 கிடாய்கள், 150 சேவல்களை வெட்டி அசைவ உணவு பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமம், முனியாண்டி சுவாமி கோயிலின் ஒவ்வொரு தை மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்களின் தாய் கிராம கோயிலாக வடக்கம்பட்டி கோயில் திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் பொங்கல் விழா நேற்று முன்தினம் துவங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது.

வடக்கம்பட்டி, பொட்டல்பட்டி, அலங்காரபுரம் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், திரண்டு பால்குடங்களை எடுத்து வந்து முனியாண்டிக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் பொட்டல்பட்டி, அலங்காரபுரம், வடக்கம்பட்டி கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் செய்ய மலர் தட்டுகளுடனும், நிலை மாலையை பூசாரியும் எடுத்து வர ஊர்வலமாக முனியாண்டி கோயிலுக்கு வந்தனர். இவர்களுக்கு முன்பு ஏராளமான ஆண்கள் சிலம்பம் சுற்றியும், ஆடிப்பாடியும் வந்தனர். ஊர்வலம் இரவு 7.45 மணிக்கு கோயிலை அடைந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நள்ளிரவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று முதலில் சக்தி கிடாய் வெட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 200 ஆட்டுக்கிடாய்கள், 150 சேவல்கள் வெட்டப்பட்டு  அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டது. பின் நேற்று அதிகாலை 5 மணிக்கு முனியாண்டி சுவாமி மற்றும் கருப்பணசுவாமிக்கு பிரியாணி, வெண்பொங்கல் படைக்கப்பட்டு பின்னர் கோயிலில் இருக்கும் பக்தர்கள், பொதுமக்களுக்கு ‘சுடச்சுட’ அசைவ பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து கோயில் விழாக்குழுத்தலைவர் ராமநாதபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 2,500 கிலோ பிரியாணி தயாரிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது,’’ என்றார்.

Related Stories:

>