தமிழகம் வந்த 4 மீனவர்களின் உடல்களை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் நேரடியாக அடக்கம் செய்யும் இடத்துக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு: உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை: இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்களை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் நேரடியாக அடக்கம் செய்யும் இடத்துக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு  தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இலங்கையில் மல்லாகம் நீதிமன்றம் உத்தரவின்பேரில் 4 மீனவர்களின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, 4 பேரின் உடல்களையும், கொண்டு வந்து சர்வதேச கடல் எல்லையில் நேற்றிரவு இந்திய கடற்படையிடம் இலங்கை கடற்படை ஒப்படைத்தது. இதையடுத்து, 4 மீனவர்களின் உடல்களையும் இந்திய கடற்படையினர் கொண்டு வந்து இன்று மதியம் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே, கோட்டைப்பட்டினம் மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

கோட்டைப்பட்டினம் மின்படி தளத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சக மீனவர்கள் இறந்த மீனவர்களின் உடல்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து மண்டபம், தங்கச்சிமடம், உச்சிப்புளி, திருப்புல்லாணி என மீனவர்களின் சொந்த ஊர்களுக்கு தனித்தனி ஆம்புலன்ஸ்களில் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட பரிசோதனை செய்து அனுப்பி வைக்கப்பட்ட இறந்த மீனவர் மெசியாவின் உடல் காவல்துறையால் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்திற்கு கொண்டுவரப்பட்டது.

சோகத்துடன்  உறவினர்கள் கதறி அழுது காத்து கொண்டிருந்த இடத்தில் நிறுத்தாமல் நேரடியாக கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் மீனவ மக்கள் ஆவேசம் அடைந்து தடுப்புகளை வைத்து மறித்து ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: