தாமிரபரணி பெரு வெள்ளத்தில் கோவில்பட்டி கூட்டுக் குடிநீர் திட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது-விநியோகம் செய்வதில் சிக்கல்

நெல்லை : தாமிரபரணியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் கோவில்பட்டி கூட்டுக் குடிநீர் திட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கோவில்பட்டிக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கனமழை கொட்டித் தீர்த்தது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகள்  நிரம்பிய நிலையில் அணைகளுக்கு அதிக நீர் வரத்து இருந்ததால் தாமிரபரணி  ஆற்றில் 90 ஆயிரம் கனஅடிக்கு மேல் ெவள்ளம் சீறிட்டு பாய்ந்தது.

தாமிரபரணி  நீர் ஆதாரத்தை நம்பி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு  மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 55 டவுன் பஞ்சாயத்துகள், 828 கிராம  பஞ்சாயத்துகளுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு  கிராமங்களுக்கும் தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து குடிநீர்  பம்பிங் செய்து கொண்டு செல்லப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட  பெரு வெள்ளத்தால் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள், பம்பிங் ஸ்டேஷன்  ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,  விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் உள்ள உறை கிணறுகள் தான் இந்த 4 மாவட்டங்களுக்கான குடிநீர் ஆதாரம். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் இதுவரை இல்லாத அளவுக்கு 4 மாவட்டங்களுக்கு குடிநீர் உந்தும் உறை கிணறுகளை பெரிதும் பாதித்துள்ளது. 4 மாவட்டங்களுக்கும் மொத்தமுள்ள 65 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் 46 குடிநீர் திட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இதில் நெல்லை சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் கோவில்பட்டி மற்றும் வழியோர கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட உறை கிணறு மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்ல ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பாலம் 50 மீட்டர் தூரத்திற்கு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் பம்பிங் ஸ்ேடஷனுக்கு செல்லும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பாலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாலம் முழுவதும் இடிபாடுகள் நிறைந்துள்ளது. இதற்கான மின் விநியோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மின் வயர்கள் அனைத்தும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இந்த பாலத்தை சீரமைக்க 3 மாதங்கள் காலமாகும் என கூறப்படுகிறது.

இதனால் கோவில்பட்டி மற்றும் வழியோர கிராமங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மாற்று ஏற்பாடாக குடிநீர் வழங்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: