அவுட் சோர்சிங் முறையில் நடந்த மினி கிளினிக் பணியாளர் நியமனங்கள் ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: மினி கிளினிக்கிற்கு அவுட் ேசார்சிங் முறையில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்த ஐகோர்ட் கிளை, மாவட்ட சுகாதாரக்குழு மூலம் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.  மதுரை, வளர்நகரை சேர்ந்த வக்கீல் வைரம் சந்தோஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மினி கிளினிக்குகளுக்கு தனியார் அவுட் சோர்சிங் முறையில் பணி நியமனம் மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் தற்ேபாதைய நிலை நீடிக்க ஏற்கனவே ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன் ஆஜராகி, ‘‘கொரோனா கால அவசரம் கருதி தற்காலிகமாக ஓராண்டுக்கு மட்டும் மினி கிளினிக்குகள் துவக்கப்பட்டுள்ளன. தற்காலிக நியமனம் தான் இது. பணி நீட்டிக்கவோ, நிரந்தரம் செய்யவோ வாய்ப்பில்லை’’ என்றார்.

வக்கீல் புகழ்காந்தி ஆஜராகி, ‘‘நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் ஏஜென்சி மூலம் நியமனங்கள் நடக்கிறது. தகுதியுள்ள பலரின் வாய்ப்பு பறிபோயுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘அவுட் ேசார்சிங் மூலம் நியமனம் மேற்கொள்வதில் தற்ேபாதைய நிலை நீடிக்க வேண்டுமென ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நியமனங்கள் நடந்திருந்தால் அது செல்லாது. எனவே, அவுட் சோர்சிங் முறையில் நடந்த பணி நியமனங்கள் ரத்து செய்யப்படுகிறது. மாவட்ட சுகாதாரக்குழு மூலமே தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். வேறு வகையில் தனியார் மூலம் நியமனங்கள் இருக்கக் கூடாது. ஒருவேளை அவர்களது பணியை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டால், விதிப்படி அறிவிப்பு வெளியிட்டு புதிதாகத் தான் நியமனங்கள் இருக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>