ஆந்திர மாநிலம் முழுவதும் வீடுகளுக்கே எடுத்துச் சென்று ரேஷன் பொருள் விநியோகம்: திட்டத்தை தொடங்கினார் ஜெகன் மோகன்

திருமலை: ஆந்திராவில் பொது மக்களின் வீட்டிற்கே  சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை  முதல்வர் ஜெகன் மோகன் நேற்றுதொடங்கி வைத்தார்.  ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்த நவரத்தின திட்டங்களின் கீழ்,  வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டமும் ஒன்று. இதற்காக, ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல 830 கோடி  செலவில், பிரத்யேகமாக  தயார் செய்யப்பட்ட  9,260 வாகனங்களின் செயல்பாட்டை விஜயவாடாவில் பேன்ஸ் சந்திப்பில் முதல்வர் ஜெகன் மோகன் நேற்று கொடியசைத்து தொடங்கி  வைத்தார்.  ஏற்கனவே, அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்காக  50 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர்களை அரசு நியமனம் செய்துள்ளது.

இந்த தன்னார்வலர்கள் மூலம் ஏற்கனவே முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான பென்ஷன் தொகையை மாதந்தோறும் 1ம் தேதி அன்று வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்படுகிறது.  மேலும், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சொத்து வரி, குடிநீர் இணைப்பு  உள்ளிட்டவை  வீட்டிற்கே சென்று பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தன்னார்வலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மூலமே இந்த திட்டத்தையும் செயல்படுத்தி,  பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.

Related Stories: