ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: முதல் முறையாக ரிஷப் பன்ட் 13வது இடத்துக்கு முன்னேற்றம்

துபாய்: இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதல் முறையாக 13வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடி முத்திரை பதித்த பன்ட் மொத்தம் 5 இன்னிங்சில் 274 ரன் குவித்து 3வது இடத்தை பிடித்தார். மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 29 ரன் எடுத்த அவர், சிட்னியில் நடந்த 3வது டெஸ்டில் 36 ரன் மற்றும் 97 ரன் விளாசி மிரட்டினார். இந்திய அணிக்கு கடும் சவாலாக அமைந்த பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 23 ரன் எடுத்த பன்ட், 2வது இன்னிங்சில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

இந்த சிறப்பான ஆட்டத்தால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் அவர் 691 புள்ளிகளுடன் முதல் முறையாக 13வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதனால், உலக அளவில் நம்பர் 1 விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் என்ற பெருமை பன்ட்டுக்கு கிடைத்துள்ளது. தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் (677 புள்ளி, 15வது ரேங்க்) அடுத்த இடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் (919) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (891) 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் விராத் கோஹ்லி ஒரு இடம் பின்தங்கி 4வது இடத்தை பிடிக்க, ஆஸி. வீரர் லாபுஷேன் 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஆஸி. தொடரில் 8 இன்னிங்சில் 271 ரன் குவித்த இந்தியாவின் புஜாரா 7வது இடத்துக்கும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 8வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர். இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மான் கில் 68வது இடத்தில் இருந்து ஒரேயடியாக முன்னேறி 47வது இடத்தை பிடித்துள்ளார். பிரிஸ்பேன் போட்டியின் 2வது இன்னிங்சில் அவர் 91 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகம் பேட் கம்மின்ஸ் (908) நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் அஷ்வின் 8வது இடத்துக்கும், பூம்ரா 9வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர்.

முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக விலகிய நிலையில், விக்கெட் வேட்டை நடத்திய முகமது சிராஜ் 32 இடம் முன்னேறி 45வது இடத்தை பிடித்துள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (436) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் ஜடேஜா ஒரு இடம் பின்தங்கி 3வது இடத்தில் உள்ளார்.

Related Stories: