மூளைச்சாவு அடைந்ததால் உடலுறுப்புகள் தானம் 20 மாத குழந்தையின் பெற்றோருக்கு அமைச்சர் ஜெயின் பாராட்டு

புதுடெல்லி: ரோகிணி பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ்குமார் என்பவரின் மகள் தனிஷ்தா. இருபது மாத சிசுவான தனிஷ்தா, முதல் மாடி பால்கனியில் கடந்த 8ம் தேதி விளையாடிய போது, எதிர்பாராத விதமாக தரை தளத்தில் தவறி விழுந்தாள். மயங்கிய நிலையில் சர் கங்கா ராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனிஷ்தாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக 11ம் தேதி தெரிவித்த டாக்டர்கள், பிழைப்பதற்கு சாத்தியமில்லை என்பதையும் கனத்த இதயத்துடன் தெரிவித்தனர். நெஞ்சை பிழியும் சோகம் என்றாலும், மனதை திடப்படுத்திக் கொண்ட ஆஷிஷ்குமாரும், அவரது மனைவியும், தனிஷ்தாவின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். நாட்டில் மிக இளம் வயதில் தானம் அளித்தவர் எனும் பெருமை தனிஷ்தாவுக்கு பொருந்திய நிலையில், அவரது இதயம், கல்லீரல், 2 சிறுநீரகம், 2 கருவிழி படலங்கள் ஆகியவை அதே மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.

உறுப்பு தேவைக்காக காத்திருந்த 5 பேருக்கு அந்த உறுப்புகள் பொருத்தப்பட்டதில், அந்த 5 பேர் மூலமாக தனிஷ்காகவை மீண்டும் பார்க்கிறோம் என தனிஷ்காவின் பெற்றோர் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், செல்போனில் தொடர்பு கொண்டு தனிஷ்தாவின் பெற்றோரை அமைச்சர் ஜெயின் பாராட்டினார். இது தொடர்பான பேஸ்புக்கில் ஜெயின் பதிவேற்றிய வீடியோ டெல்லியில் வைரலாகி உள்ளது. வீடியோவில் ஜெயின் கூறுகையில், ‘‘பிறந்த சில மாதங்களில் குழந்தையை பறிகொடுப்பது தாங்க முடியாத துயரமாகும். சோகத்தை நெஞ்சில் சுமந்தபடி, இரும்பாக மனது கனத்தாலும், குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெரிய மனதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இத்தகைய பெருந்தன்மை மக்களிடம் ஏற்பட வேண்டும்’’, என வாழ்த்தியுள்ளார்.

Related Stories: