24, 26 விடுமுறை நாட்களில் தரிசன திட்டத்தை மாற்றி கொள்ளுங்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவுரை

திருமலை: வரும் 24, 26ம் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் மற்றும் ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.  

இந்த கவுன்டர்களில் வரும் 22ம் தேதி வரையிலான தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று (நேற்று) வந்த பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. அவர்கள் வரும் 23ம் தேதியில் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடியும். வரும் 24ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, 26ம் தேதி குடியரசு தினம் விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: