4 நாட்களில் நாடு முழுவதும் 4.54 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 4 நாட்களில் 4.54 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. முன்களப் பணியாளர்களுக்கு இது முதல் கட்டமாக போடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4 லட்சத்து 54 ஆயிரத்து 49 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 10,064 ஆக குறைந்துள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தடுப்பு மருந்து பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களை போல் இரண்டு மடங்கு பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

* மேலும் 45 லட்சம் கோவாக்சின் டோஸ்

பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு ஏற்கனவே 55 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொண்டதுமே, ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், 16.5 லட்சம் டோஸ் கோவாக்சின் மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் நன்கொடையாக மத்திய அரசுக்கு வழங்கி இருக்கின்றது. இந்நிலையில், இந்த நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக 45 லட்சம் டோஸ் தடுப்பூசியை வாங்குவதற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த 45 லட்சம் டோசில் 8 லட்சம் டோஸ்கள், மொரீசியஸ், பிலிப்பைன்ஸ், மியான்மர் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.

Related Stories:

>