திருப்பதி மருத்துவமனையில் டாக்டர்களை அலற விட்ட பெண் பிறந்த குழந்தை கடத்தப்பட்டதாக நாடகம்: கர்ப்பம் கலைந்ததை மறைத்து சீமந்தம் நடத்தியது அம்பலம்

திருமலை: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மந்தநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சசிகலா. இவர்கள் உறவினர்களுடன் நேற்று முன்தினம் திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கிருந்த டாக்டர்களிடம் ‘நேற்று முன்தினம் பிரசவம் பார்க்கப்பட்ட எங்கள் குழந்தையை எங்கு கொண்டு சென்றீர்கள்’ எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள், பிரசவமே நடக்காத பெண்ணுக்கு பிரசவம் நடந்ததாகவும், குழந்தையை கேட்பதாகவும் அலிபிரி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் அங்கு வந்து வந்து விசாரித்தனர்.

அப்போது, போலீசாரிடம் சசிகலா கூறியதாவது: நான் கடந்த 2ம் மற்றும் 5ம் தேதி திருப்பதி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றேன். பிரசவத்திற்கு 16ம் தேதி வரும்படி டாக்டர்கள் கூறினர். இதற்கிடையே, ஊர் மக்கள் முன்னிலையில் எனக்கு சீமந்தம் நடந்தது. தொடர்ந்து டாக்டர்கள் கூறியபடி கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வலி வந்தபின் பிரசவம் பார்ப்பதாக கூறி டாக்டர்கள் என்னை காத்திருப்பு அறையில் இரவு முழுவதும் உட்கார வைத்தனர். பின்னர், நேற்று முன்தினம் காலை மயக்க மருந்து ஏற்றி என்னை உள்ளே அழைத்துச் சென்றனர்.

நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது நர்ஸ்கள் அறை அருகே இருந்தேன். எனது பிரசவம், பிறந்த குழந்தை குறித்து கேட்டபோது, ‘உனக்கு கருவே இல்லை. பின்னர் எப்படி பிரசவம் செய்ய முடியும்’ என டாக்டர்கள் கூறினர். எனக்கு பிறந்த குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் கடத்தி விற்பனை செய்து விட்டனர். இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார். இதற்கு டாக்டர்கள் மறுப்பு தெரிவிக்கவே, சசிகலாவுக்கு திருப்பதி தனியார் மருத்துவமனையில் கருத்தரிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சசிகலா அனைவரையும் ஏமாற்றியது தெரிந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கர்ப்பிணியாக இருந்த சசிகலாவுக்கு திடீரென கரு கலைந்து, நெல்லூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். பின்னர் ஊர்மக்கள் முன்னிலையில் சீமந்தமும் நடத்தப்பட்டுள்ளது.இதை மறைத்து குழந்தை பிறந்ததாக அவர் நாடாகமாடியுள்ளார்.

Related Stories:

>