விருதுநகரில் 60 நாட்களுக்குள் சாலை `அம்போ’

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் மாவட்டத்தில் போடப்படும் சாலைகள் தரமற்ற வகையில் போடப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையால் மத்திய அரசின் நிதியில் எஸ்சிபிஏஆர் திட்டத்தில் (ஒப்படைக்கப்பட்ட ஒட்டுமொத்த வருவாய் திட்டம்) மாவட்டத்தில் பலகோடி ரூபாய் செலவில் ஊராட்சி கட்டிடங்கள், புதிதாக சாலைகள் ஒவ்வொரு ஆண்டு போடப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கட்டப்படும் கட்டுமானங்கள், போடப்படும் சாலைகள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாவது தாக்குப்பிடிக்கும் வகையில் தரமாக போடப்பட வேண்டும். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் போடப்படும் சாலைகள் ஏற்கனவே இருக்கும் மண் ரோடுகளை சமன் செய்யாமல் உரிய கனத்திற்கு ஜல்லி கற்கள், தார் சேர்க்காமல் மேலோட்டமாக போட்டு பணம் சுருட்டும் வேலை அசுரகதியில் நடந்து வருகிறது.

விருதுநகரை ஒட்டிய சிவஞானபுரம் ஊராட்சியில் லட்சுமிநகர் மல்லிகை தெருக்கள் எஸ்சிபிஏஆர் திட்டத்தில் ரூ.31.97 லட்சம் செலவில் 60 நாட்களுக்கு முன்பாக சாலை போடப்பட்டுள்ளது. ஆனால், அச்சாலை மக்கள் பயன்படுத்த துவங்கும் முன்பே பல இடங்களில் சிதைந்து வருகிறது. லாரி, வேன் செல்லும் சாலைகள் மேலோட்டமாக போடப்பட்டதால் சிதைந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ` மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட நிதிகளில் செயல்படுத்தப்படும் பணிகளை பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும். தரமற்ற வகையில் சாலைகளை போடும் ஒப்பந்தகாரர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும். தொடர்ந்து தரமற்ற பணிகள் செய்வோரை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: