கட்டுப்பாடுகள் காரணமாக அனுமதி இல்லாததால் தாராவியில் பொங்கல் பண்டிகை எளிமையாக கொண்டாட்டம்

மும்பை:  கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கணபதி விழா, தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளின் கொண்டாட்டங்களை கொண்டாட முடியாமல் போனது. இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக ஆங்கில புத்தாண்டை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். தாராவியில் வருடந்தோறும் பொங்கல் விழா களைக்கட்டும். அன்றைய தினம் தாராவியில் நள்ளிரவு முதல் பொங்கலை கொண்டாடிடும் வகையில் பல்வேறு அமைப்புகள் ஆயத்த பணிகளை மேற்கொள்வார்கள். சுமார் 5000த்திற்கும் அதிகமானோர் பல்வேறு இடங்களில் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

அதற்கு முன்னதாக காவல்நிலையத்திற்கு சென்று அனுமதி கடிதங்களை பெற்றுக் கொள்வார்கள். ஆனால்,  இந்த ஆண்டு கொரோனா மற்றும் அரசு வழிக்காட்டு விதிமுறைகள் காரணமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு அனுமதி கிடைக்க வில்லை. இதன் காரணமாக பல்வேறு அமைப்புகள் விரக்திக்குள்ளாகினர். கொரானா பரவல் மற்றும் மகாராஷ்டிரவின் சில இடங்களில் மகாராஷ்டிரா அரசு வழிக்காட்டு விதிமுறைகள்படி பெரும் பாலான இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படவில்லை. இருப்பினும் மும்பையில் சில இடங்களில் வசித்து வரும் தமிழர்கள் பொங்கல் விழாவை சமூக இடைவெளியுடன் எளிமையான முறையில் கொண்டாடினர்.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் சார்பில் தாராவி கமலா நேரு நகர் ஐயப்பன் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு 25 பானைகளில் பொங்கல் வைத்து  கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய செயலாளர் கராத்தே முருகன் தலைமை தாங்கினார். பவாய் ஐஐடிக்கு அருகில் பவாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 108 பெண்கள், 108 பானைகளில் வைத்து பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தனர். பவாய் தமிழ்ச்சங்கத் தலைவர் முருகன் தலைமையில் பொறுப்பாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.  நவிமும்பையில் உள்ள உல்வே என்ற இடத்தில் உல்வே தமிழ்ச் சங்கம் மற்றும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் பொறுப்பாளர் கிருஷ்ணன் சகாதேவன் மற்றும் உறுப்பினர்கள் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

மேற்கண்ட 3 நிகழ்ச்சிகளிலும், சிறப்பு விருந்தினராக பாஜக தென்னிந்தியரணி மும்பை தலைவர் என். முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டார்.அந்தேரி கிழ‌க்கு சாகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி கணேஷ் ஆலயத்தில் வைத்து ஸ்ரீசக்தி கணேஷ் அறக்கட்டளையின் சார்பாக 3 ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பாஜக எம்எல்ஏ பராக் அலவானி மற்றும் பாஜக தென் இந்தியர் அணி மும்பை தலைவர்  என். முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தாராவியில் மும்பை விழித்தெழு இயக்கத்தின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், பி.எஸ்.ஐ.ஏஎஸ் பொதுச்செயலாளர் மாறன் நாயகம், மலாடு தமிழர் நல சங்கத் தலைவர் லெ. பாஸ்கரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  தாராவியில் கிராஸ் ரோட்டில் நடந்த மற்றொரு பொங்கல் விழாவில் மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கலந்து கொண்டார்.

தாராவி  90 அடி சாலை உள்ள பாலாஜி நகர் சக்தி விநாயகர் கோவில் மற்றும்  90 அடி சாலையில் இந்து யுவசேனா சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வருடந்தோறும் பொங்கல் விழா அன்று தாராவியில் களைக்கட்டும். ஆனால், இந்த பொங்கல் விழா களையிழந்து காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கலிட்டு பண்டிகையை எளிமையாக கொண்டாடினர். புறநகர் மும்பையில் மும்பை தமிழ் இயக்கம் சார்பில் 9ம் ஆண்டு பொங்கல் விழா வில்லே பார்லே நேருநகர் அண்ணாசால் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழா அன்று ஆண்டுதோறும் நடன நிகழ்ச்சி, கிரிக்கெட் போட்டி, கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு காவல்துறையின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் விழா நடைபெற வில்லை.

Related Stories: