இரு கட்டமாக நடக்கிறது ஜன.29ல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

ஹுப்பள்ளி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி தெரிவித்தார். இது குறித்து ஹுப்பள்ளியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 29ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்தத் உரையாற்றுகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் வரும் 30ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

அதை தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசின் சார்பில் 2021-22ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதை தொடர்ந்து குடியரசு தலைவர் உரை மீதும் பட்ஜெட் மீதும் விவாதம் பிப்ரவரி 15ம் தேதி வரை நடக்கும். பின் இரண்டாவது கட்டமாக மார்ச் 8ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் துறைகள் மீதான விவாதம் நடக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க அரசு தயாராகவுள்ளது என்றார்.

Related Stories: