ஐசியு படுக்கைகளை ஒதுக்கும் விவகாரம்: ஜன.18க்குள் அறிக்கை டெல்லி அரசுக்கு கெடு: ஐகோர்ட் அதிரடி

புதுடெல்லி: கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நகரில் உள்ள 33 தனியார்  மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளை ஒதுக்குவது தொடர்பான ஆம் ஆத்மி அரசு கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லியில் சுகாதார சேவைகளை வழங்குவோர்(மருத்துவமனைகள்) சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் சுகாதார சேவைகள் வழங்குவோர் சங்கம் தாக்கல் செய்த மனு நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா முன்பாக விசாரணைக்கு வந்தது. அவர்களது சார்பில் ஆஜரான வக்கீல் மனிந்தர் சிங் வாதிடுகையில், அரசின் செப்டம்பர் 12ம் தேதியிட்ட உத்தரவால் 33 தனியார் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் காலியாக  வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நிதி இழப்பை எதிர்கொண்டு வரும் மருத்துவமனைகளுக்கு  அரசாங்கத்தால் பணம் செலுத்தப்படவில்லை என்றும் வாதிட்டார்.

மேலும், தனியார் மருத்துவமனைகள் அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கவும்  உதவவும் அரசாங்கம் விரும்புகிறது. அதன்பின்னர் தனியார் மருத்துவமனைகளை அழிக்கப்பட வேண்டும் என்று  விரும்புகிறது. ஐ.சி.யூ படுக்கைகள் இவ்வளவு  நேரம் காலியாக வைக்கப்படும்போது தனியார் மருத்துவமனைகள் எவ்வாறு  உயிர்வாழும். அவை மூடப்படுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். இதற்கு, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் கோஷ் மற்றும் ஊர்மி  வாதிடுகையில், அரசு செப்டம்பர் 12ல் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்து 40 சதவீத ஐசியு படுக்கைகள் ஒதுக்கினால் போதும் என தெரிவித்துள்ளது. இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு நஷ்டம் என்கிற பேச்சு எழவில்லை.

மேலும், 80 ஐசியு படுக்கைகளை ஒதுக்க உத்தரவிட்டதால், கோவிட் அல்லாத நோயாளிகள் யாரும் தங்களுக்கு ஐசியு படுக்கைகள் கிடைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தை இதுவரைய நாடவில்லை என கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் டெல்லி மாநில அரசு வரும் ஜனவரி 18ம் தேதிக்குள் ஆலோசனை கூட்டம் நடத்தி ஆய்வு செய்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன்பின் அடுத்த நாள் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கும் என கூறி, ஜனவரி 19ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories: