சில அரசியல் கட்சிகள் கொரோனா தடுப்பூசி குறித்து தவறான கருத்தை பரப்புகிறது: பாஜ தேசிய பொதுசெயலாளர் சி.டி.ரவி குற்றச்சாட்டு

பெங்களூரு: கொரோனா தடுப்பு ஊசி குறித்து தவறான கருத்துக்கள் தெரிவித்து வருவது தேவையற்றது என்று பா.ஜ. தேசிய பொதுசெயலாளர் சி.டி.ரவி தெரிவித்தார். உடுப்பியில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. ஆனால் சிலர் தடுப்பூசி குறித்து தவறான கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி குறித்து தவறாக பேசுவது தேவையற்றது. சில கட்சிகள் நாங்களும் செய்ய மாட்டோம் செய்பவர்களையும் விட மாட்டோம் என்ற மனபான்மை கொண்டுள்ளனர். இதை மாற்றிக்கொள்ள வேண்டும். இது போன்ற கட்சிகளை மக்கள் நாட்டின் அரசியலில் இருந்தே அழித்து விடுவார்கள்.

வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகள் வந்தால் நல்லது என்று தெரிவிக்கின்றனர். ஆனால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நமது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசி மீது நம்பிக்கையில்லை ஆனால், நமது நாட்டின் மக்கள் ஓட்டுக்கள் மட்டும் அவர்களுக்கு தேவை. மாநில அமைச்சரவை விஸ்தரிப்புக்கு கட்சி மேலிடம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இன்று நடைபெறவுள்ளது. கட்சியில் தகுதியுள்ளவர்கள் அதிகமாகவுள்ளனர். ஆனால் அமைச்சர் பதவிக்கு வரும் தகுதி யாருக்கு உள்ளது என்பது பதவி ஏற்பு விழாவின் போது தெரியும்’’ என்றார்.

Related Stories: