வேளாண் சட்ட ஆதரவு மேடை, ஹெலிபேட் சூறையாடல்; ஒருபக்கம் பேச்சுவார்த்தை, மறுபக்கம் ஆத்திரமூட்டும் செயல்: பாஜவுக்கு சிரோன்மணி அகாலிதளம் கண்டனம்

சண்டிகர்: அரியானாவில் பாஜக சார்பில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட போது, இதற்கான மேடை மற்றும் ஹெலிபேட் சூறையாடப்பட்டது. இதனை சிரோன்மணி அகாலி தளம் கண்டித்துள்ளது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 47 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதே சமயத்தில், வேளாண் சட்டங்களின் நன்மைகளை விளக்கி, கிராம மக்களிடையே பேசுவதற்காக பாஜக மூத்த தலைவரும், அரியானா மாநில முதல்வருமான மனோகர்லால் கட்டார் கர்னால் மாவட்டம் கைம்லா கிராமத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

‘கிசான் மகாபஞ்சாயத்து’ என்ற பெயரில் நேற்று விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதற்கு பாரதிய கிசான் சங்கம் (சாருனி) எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதையும் மீறி நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியை முறியடிக்கும்  நோக்கத்தில், பாரதிய கிசான் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கைம்லா கிராமத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். கையில் கருப்பு கொடிகளை ஏந்தியபடி, மத்திய பாஜ அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரின் எதிர்ப்பை மீறி அவர்கள் முன்ேனறி சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக போராட்டக்காரர்கள் மீது போலீசாா் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், ‘கிசான் மகாபஞ்சாயத்து’ நிகழ்ச்சி நடக்க இருந்த இடத்தை அடைந்தனர். அங்கு போடப்பட்டிருந்த மேடையை பிய்த்து எறிந்தனர். மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். முதல்வர் மனோகர்லால் கட்டாரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்தையும் (ஹெலிபேட்) விவசாயிகள் சூறையாடினர். தொடர் பதற்றம் ஏற்பட்டதால், முதல்வர் மனோகர்லால் கட்டார் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

மாநிலத்தில் ெதாடர் பதற்றம் நிலவும் நிலையில், சிரோன்மணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில், ‘அரியானா பாஜக அரசின் செயல்பாடுகளை பார்க்கும் போது மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக வெறுப்புடன் இருப்பதை காட்டுகிறது. அவர்கள் பிரச்னையை தீர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மற்றொரு பக்கம் ஆத்திரமூட்டும் செயல்களை செய்கின்றனர். ஜனநாயக எதிர்ப்புக்களை அடக்க அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்துகின்றனர்’ என்றார்.

Related Stories: