கரும்பு தோட்டத்தில் காமுகன் செய்த பாதகம் 7 மாத கர்ப்பத்தை சுமந்த உ.பி. சிறுமி பரிதாப சாவு: கருக்கலைப்புக்கு அனுமதி தராததால் நிகழ்ந்த சோகம்

பரெய்லி: உத்தர பிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்தாண்டு ஜூனில் இயற்கை உபாதையை கழிக்க கரும்பு தோட்டத்துக்கு சென்ற போது, 30 வயது நபரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதை வெளியில் சொன்னால், அப்பெண்ணையும் அவருடைய குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டினார். இதனால், நடந்த சம்பவத்தை சிறுமி மறைத்து விட்டாள். கடந்த டிசம்பரில் தனது மகள் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதை தந்தை கண்டுபிடித்தார். பெண்ணிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவங்களை தெரிவித்தார். இது பற்றி போலீசில் தந்தை புகார் அளித்தார். இதையடுத்து, பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மகளின் கர்ப்பத்தை கலைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் சிறுமியின் தந்தை அனுமதி கேட்டார். ஆனால், சிசு வளர்ந்து விட்டதால் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனால், கர்ப்பத்தை சிறுமி சுமந்தார். கடந்த வாரம் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த வாரம் சனிக்கிழமை சேர்க்கப்பட்ட அவர், கடந்த வியாழக்கிழமை பரிதாபமாக இறந்தார். சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, கர்ப்பத்தை கலைக்க முடியாததால் இறந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: