ஐபிஎல்லில் சம்பளமாக இதுவரை ரூ.137.8 கோடி பெற்ற டோனி: அடுத்த இடங்களில் ரோகித், கோஹ்லி

மும்பை: 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம்தேதி வரை நடத்தப்பட்டது. 14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறும் என தெரிகிறது. இதில் அணிகள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு வரும் 21ம்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பரஸ்பர அடிப்படையிலான வீரர்கள் பரிமாற்றம் பிப்ரவரி 4ம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், கேதர்ஜாதவ்வை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் சில வீரர்களும் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது. இதனிடையே கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் துவங்கியதில் இருந்து வரும் சீசன் வரை ஐபிஎல்லில் சிஎஸ்கே கேப்டன் டோனி பெறும் சம்பளம் 150 கோடி ரூபாயை கடந்துள்ளது. டோனி இதுவரை நடந்துள்ள 13 சீசன்களிலும் சென்னை அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அடுத்த சீசனிலும் அவர் ரூ.15 கோடி சம்பளத்துடன் கேப்டனாக நீடிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதுவரை ஐபிஎல் மூலம் 137.8 கோடி ரூபாயை டோனி சம்பளமாக பெற்றுள்ளார். இந்நிலையில் அடுத்த சீசனில் 15 கோடி ரூபாயும் சேரும்போது அவர் ஐபிஎல் மூலம் 150 கோடி  சம்பளம் பெறும் முதல் வீரர் என்ற நிலையை அடைவார். மும்பை கேப்டன் ரோகித் சர்மா 131.6 கோடியுடன் 2வதுஇடத்திலும், பெங்களூரு கேப்டன் கோஹ்லி 126.2 கோடியுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories: