தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள்

அவனியாபுரம்: தைப் பொங்கலன்று அவனியாபுரத்திலும், பிறகு பாலமேடு, அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்த ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுக்காக அவனியாபுரம் தயாராகி வருகிறது. முட்டி எறிய காளைகளும், அடக்கப்போகும் காளையர்களும் தீவிர பயிற்சிகளில் உள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் சாலையில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு தைப்பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. ‘தென்கால் பாசன விவசாயிகள் சங்கம்’ மூலம் இந்த ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட பொழுது அனைவரும் ஒன்று திரண்டு போராடி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றனர்.

இதனால் அவனியாபுரம் பொதுமக்களும், தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்துடன் சேர்ந்து தங்களையும் ஒரு ஜல்லிக்கட்டு கமிட்டி குழுவில் உறுப்பினராக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளின் கீழ் ஒரு குழு அமைத்து நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் கிராம மக்கள் கூறுகையில், ‘‘அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய குழு ஒன்று அமைத்து ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற அரசு ஆவன செய்ய வேண்டும்.

சிலர் தன் சுயலாபத்திற்காக அதை ஏற்க மறுத்து வருகின்றனர். கலெக்டரிடம் கோரிக்கை மனுவும் அளித்தோம். ஜல்லிக்கட்டு விழாவிற்காக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பரிசுப் பொருட்களை வாரி வழங்குவதாலும், நன்கொடையாக பணம் கிடைப்பதாலும் இதை ஒரு சாரார் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்துகின்றனர் என்ற ஐயம் ஏற்படுகிறது’’ என்றனர். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மேலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை மாடுகள் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது மாடுபிடி வீரர்களுக்கும், காளை மாடு வளாப்போருக்கும் மிகுந்த கவலையை அளித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு அதிக அளவில் மாடுபிடி வீரர்களையும், காளை மாடுகளையும் அனுமதித்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தயாராகும் காளைகள்....

ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் காளைகள் தினந்தோறும் மிக சத்தான உணவு வகைகளான கம்பு, திணை, பச்சரிசி,  வெல்லம், நாட்டுக்கோழி முட்டை என வழங்கப்பட்டு செழிப்புடன் வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று இளைப்பு வராமல் போராட நீச்சல் பயிற்சியும், நடைபயிற்சியும் மாடுபிடி வீரர்களை எதிர்த்து நின்று அவர்களை தூக்கி வீசுவதற்கு மணல் குவித்து அதை குத்தி தூக்கி எறியும் பயிற்சியும் தினந்தோறும் மாடு வளர்ப்போர் வழங்கி வருகின்றனர்.  ஜல்லிக்கட்டில் பிடிபடாமல் செல்லும் காளைகளுக்கு பரிசு பொருட்கள் கிடைப்பதோடு, மாடு வளர்ப்போர்க்கும் பெருமை கிடைக்கிறது. காளைகளுக்கு  ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளுக்காகவே தினமும் ரூ.700 முதல் ரூ.1000 வரை செலவு செய்தும் வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு திடல் வேண்டும்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சாலையில் நடைபெறுவதால் இருபுறமும் பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி அமைப்பதில் சிரமம் உள்ளது. மாடுகளை நிறுத்தும் இடம்  அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ளது. அங்கு குழுமியிருக்கும் மக்கள் மீது மாடு முட்டி அதிக காயம் ஏற்படுகிறது.  பார்வையாளர்கள் அதிகளவு அமர்ந்து பார்த்திட உதவும் வகையில் நிரந்தர ஜல்லிக்கட்டு திடலை உருவாக்க வேண்டும் என அவனியாபுரம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: