தூத்துக்குடியில் 300 கிலோ அரியவகை கடல் அட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி :  தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான 300 கிலோ அரியவகை கடல் அட்டைகள் சிக்கின.மன்னார்வளைகுடாவில் காணப்படும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று கடல் அட்டை. இதனை பிடிக்கவும், வைத்திருக்கவும் அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் ஆண்மை விருத்தி மருந்துகள் தயாரிக்க கடல் அட்டைகள் பிடிக்கப்பட்டு கேரளா மற்றும் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் கடல்அட்டை கடத்தப்படுவதாக மத்தியபாகம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது தலைமையிலான போலீசார் லூர்தம்மாள்புரம் பகுதியில் ஒரு குடோன் முன்பு சோதனை நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லோடு ஆட்டோவில் சிலர் மூடைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோடிவிட்டனர். போலீசார் அந்த லோடு ஆட்டோவை சோதனையிட்டனர்.

அதில் 8 மூடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ எடையுள்ள அரியவகை கடல் அட்டைகளை லோடு ஆட்டோவுடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் தாளமுத்துநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக பிரபல கடல் அட்டை கடத்தல் புள்ளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: